Friday 22 March 2019

கவியரசு குறித்து கவிக்கோ...

கவியரசு குறித்து கவிக்கோ...
#கண்ணதாசன் #என்னும் #மாமனிதர்
கவிஞர் கண்ணதாசன், திமுகவிலிருந்து வெளியேறித் தமிழ் தேசிய கட்சி, காங்கிரஸ் கட்சி என்று இருந்த நேரம்.கலைவாணர் அரங்கில் அவர் தலைமையில் கவியரங்கம் ஏற்பாடு செய்யப் பட்டது.
நானும் கலந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது.
அரங்கத்தில் கவிதை பாட வந்த பொன்னிவளவன் என்ற கவிஞர் கண்ணதாசன் கட்சிகள் மாறிய போக்கைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
தாக்குதல் வரம்பு கடந்தது.கண்ணதாசன் கோபத்துடன் அரங்கை விட்டு வெளியேறினார்.
சபையில் சலசலப்பு உண்டாகிவிட்டது. நானும் சிலரும் அவரைப் படாதபாடு பட்டு சமாதானப்படுத்தி அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைத்தோம். அடுத்துப் பாட வந்த புலமைப்பித்தன்
"அறுக்கத்தான் வேண்டும் உன் நாவை - எங்கள்
அண்ணாவைக் குறை சொன்ன காரணத்தால் "
என்று ஆரம்பித்தார். நான் கண்ணதாசனைப் பார்த்தேன். அவர் முகம் சிவந்தது. இது ஏதடா வம்பு. மீண்டும் வெளி நடப்பு செய்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்த போது
"பொறுக்கத்தான் வேண்டும் உன்னை - ஏனென்றால் உன்
பொன்னான செந்தமிழுக்காக "
என்று தொடர்ந்தார்.கண்ணதாசன் கொஞ்சம் சமாதானப் பட்டு அமர்வது தெரிந்தது. நான் பாட எழுந்தேன்.. பொன்னிவளவன் எதை விமர்சித்தாரோ அதையே நானும் எழுதி வைத்திருந்தேன்
படிக்கலாமா? வேண்டாமா? ஒரு கணம் தயங்கினேன். பிறகு படித்து விடுவதென முடிவு செய்தேன்.
"கண்ணதாசனே,
நீ யாரைப் போன்றவன்
கடலிலிருந்து
ஒரு வெப்பத்தால் புறப்பட்டாய்
மேலும் கீழும் எங்கெங்கோ
அலைந்து திரிந்தாய்
இருந்தாலும் இறுதியில்
புறப்பட்ட இடத்திற்கே
வந்து சேர்ந்து விட்டாய்"
என்று பாடி முடித்தேன். முடிவுரையில் பேசிய கண்ணதாசன்
" என்னைத் தாக்க வேண்டுமானால் இப்படி ( அப்துல் ரகுமான் பாடியது போல) தாக்குங்கள் ஏற்றுக் கொள்கிறேன்"
என்றார். அந்த உரையில் அவர் இன்னொன்றூம் சொன்னார். அதை என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது.
"நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாரும் இல்லையே என்று ஏங்குவேன். இதோ அப்துல் ரகுமான் வந்து விட்டார்.
இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் 'யார் இந்தக் கவிஞன் என்று நிச்சயம் உலகம் விசாரிக்கும் ".
வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம். இதைவிட ஒரு கவிஞனுக்கு வேறென்ன வேண்டும்? கவிஞர் கண்ணதாசன் மிக உயரமான இடத்தில் உட்காந்திருந்தவர்.
அத்தகையவர்களிடத்தில் ஆணவமும், கர்வமும் இருக்கும். மற்ற கவிஞர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் கண்ணதாசன் அப்படிப்பட்டவர் அல்லர் என்பதை இந்தப் பாராட்டின் மூலம் வெளிப்படுத்தி விட்டார். நான் உருகி விட்டேன். அன்று தான் புரிந்து கொண்டேன்..
கண்ணதாசன் ஒரு நல்ல கவிஞர் மட்டுமல்லர். ஒரு நல்ல மனிதரும் கூட . கவிஞனாகி விடலாம், ஆனால் மனிதனாவது அவ்வளவு எளிதல்லவே......
கவிக்கோ அப்துல் ரகுமான் பொன் மலர் கட்டுரையில் படித்ததில் பிடித்தது..

No comments:

Post a Comment