Tuesday 19 March 2019

எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதைத் தர வேண்டும்?

எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதைத் தர வேண்டும்?
மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்;
''நான் கோவாவில் உள்ள, பர்ரா கிராமத்தை சேர்ந்தவன். தர்பூசணி விளைச்சில் மிகவும் பெயர் பெற்ற எங்கள் கிராமத்தில், விவசாயிகள் அதிக அளவில் தரமான, மிகப் பெரிய தர்பூசணிப் பழங்களை அறுவடை செய்து வந்தனர்.
நான் பள்ளி சிறுவனாக இருந்த போது, ஆண்டு தோறும் மே மாதம், அறுவடை முடிந்த பின், எங்கள் ஊரை சேர்ந்த விவசாயி ஒருவர், சிறுவர்களுக்கான தர்பூசணி பழங்களை சாப்பிடும் போட்டி நடத்துவார்.
அனைத்து சிறுவர்களையும், இந்த போட்டியில் பங்கேற்கும் படி அழைப்பு விடுப்பார். அவரது தோட்டத்தில் விளைந்த, மிகப் பெரிய தர்பூசணி பழங்களை இலவசமாக எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பார்.
அதில் இருக்கும் விதைகளை கடித்துவிடாமல், மெதுவாக ஒரு பாத்திரத்தில் உமிழும்படி கூறுவார். நாங்களும் அவ்வாறே செய்வோம். போட்டியின் முடிவில் கிடைத்த விதைகளை எடுத்து சேகரித்து, அடுத்த சாகுபடிக்கு தயாராவார். அந்த விதைகளின் மூலம் உருவான செடிகள், முந்தைய ஆண்டை காட்டிலும் பெரிய பழங்களை விளைவிக்கும்.
பள்ளிப் படிப்பு முடித்து, நான் மும்பை சென்று ஐ.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம் பெற்று, 6.5 ஆண்டுகள் கழித்து, என் சொந்த ஊருக்கு திரும்பினேன். எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியும், ஏமாற்றமுமே மிஞ்சியிருந்தது.
என் பள்ளிப் பருவத்தில் பார்த்த அளவுக்கு பெரிய பழங்கள் என் கண்ணில் தென்படவில்லை. எங்கு பார்த்தாலும் சிறிய அளவிலான தர்பூசணி பழங்களே விற்பனைக்கு இருந்தன.
எங்களுக்கு போட்டி நடத்தி, இலவசமாக பழங்களை வழங்கிய விவசாயியின் மகன், தற்போது, அந்த போட்டியை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், அவர் போட்டிக்கு பயன்படுத்திய பழங்களும் மிகச்சிறியவையாகவே இருந்தன.
விவசாயியின் மகன், தன் வயலில் விளைந்த மிகப் பெரிய பழங்களை, நல்ல விலை கிடைப்பதாகக் கூறி, சந்தையில் விற்றுவிட்டு,அவர் தோட்டத்தில் விளைந்த, சிறிய பழங்களை கொண்டு போட்டி நடத்தி, அதன் மூலம் கிடைத்த விதைகளை சேகரித்து, அதை பயன்படுத்தி மீண்டும் விவசாயம் செய்தார்.
பலன், சிறிய பழங்களிலிருந்து சேகரித்த விதைகள், அதை விட சிறிய பழங்களையே விளைவித்தன. இப்படி, ஏழு ஆண்டுளில், பார்ராவின் சிறந்த பழங்கள் காணாமல் போயின.
மனிதனின் வாழ்க்கையும் இப்படித்தான். நாம் இன்று எதை விதைக்கிறோமோ, அதைத் தான் அடுத்த தலைமுறையினரிடம் அறுவடை செய்ய முடியும்.
25 ஆண்டுகளில், மனிதர்களின் தலைமுறை மாற்றம் நிகழ்கிறது. நாம் செய்துகொண்டிருக்கும் அல்லது கற்றுக்கொடுக்கும் தவறுகள், 200 ஆண்டுகளுக்குப் பின் அதன் தாக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தும்.
எனவே, நம் வருங்கால சந்ததியினருக்கு நல்லனவற்றை போதித்து, அவர்களை நல்வழிப்படுத்துதல் நம் கடமை.
நல்லனவற்றை மட்டுமே விதைப்பதன் மூலம், வளமான, வலிமையான எதிர்கால சந்ததியை உருவாக்கலாம். நம்மிடம் உள்ள நல்லவைகளை அடுத்த தலைமுறையினருக்கும் தொடரச் செய்வது நம் தலையாய கடமைகளில் ஒன்று''
இப்படிக்கு,
மனோகர் பாரிக்கர்.
குறிப்பு;கடவுளும் நல்ல பழங்களை(மனோகர் பாரிக்கர்) இப்படி விரைவாக எடுத்துக் கொண்டால்?மீதி இருக்கும் இந்த கெட்ட பழங்களில் இருந்து கிடைக்கும் விதைகளின் பலன் எப்படி பட்டதாக இருக்கும்?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment