Wednesday 27 March 2019

மழலையர் பள்ளி ஆசிரியரின் நினைவாற்றல்.....

மழலையர் பள்ளி ஆசிரியரின் நினைவாற்றல்.....
30 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் படித்த மாணவரின் பெயரை கேட்டவுடன் மழலையர் பள்ளி ஆசிரியருக்கு தன் மாணவரின் ஞாபகம் வருகிறது என்றால், அவர் எந்த அளவுக்கு தன் மாணவர்களை நேசித்திருப்பார்?
டெல்லியில் மழலையர் பள்ளி (Play school) வைத்து நடத்தும் சுதா சத்யன், அமெரிக்காவுக்குச் செல்ல நேற்று டெல்லியிலிருந்து சிகாகோ செல்லும் விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்படத் தயாரானதும் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகன் பாசின் என்ற பெயரைக் கேட்டவுடன் சுதாவுக்கு பழைய நினைவுகள் கண்முன் வந்து சென்றன.
ஒரு சின்ன பிளாஷ்பேக்..
30 ஆண்டுகள் முன்பு சுதா ஒரு மழலையர் பள்ளியில் வேலை செய்தார்.
அங்கு ரோகன் பாசின் என்னும் சிறுவனை பெற்றோர் அழைத்து வந்து சுதாவின் வகுப்பில் சேர்த்தனர். சுதா அந்தச் சிறுவனைப் பார்த்து உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் என் பெயர் `கேப்டன் ரோகன் பாசின்' என்று கூறியிருக்கிறார். சுதாவுக்கு அந்த சிறுவனை மிகவும் பிடித்துப் போனது. விமானி ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே கனவு கண்ட ரோகன் கடைசியில் விமானியாகிவிட்டார்.
இப்போது செய்திக்கு வருவோம்.. `கேப்டன் ரோகன் பாசின்' என்னும் பெயரை கேட்டதும் சுதாவுக்கு தன் மாணவனாகத்தான் இருக்கும்; அவன் கனவு கண்டபடியே விமானியாகிவிட்டான் என்று உறுதியாக நம்பினார் சுதா. விமானப் பணிப்பெண்ணை அழைத்த சுதா, விமானி ரோகனை நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். விமானப் பணிப்பெண் ரோகனை அழைத்து வந்தார். தன் ப்ளே ஸ்கூல் டீச்சரைப் பார்த்த ரோகனுக்கு இன்ப அதிர்ச்சி. இருவரும் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வைப் பற்றி கேப்டன் ரோகனின் அம்மா ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டார். ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது மழலையர் பள்ளியில் சுதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், நேற்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கேப்டன் ரோகன் குடும்பத்தில் பலர் இந்திய விமானப்படையில் பணிபுரிபவர்கள். ரோகனின் தாத்தா ஜெய்தேவ் பாசின், 1951-.ம் ஆண்டு முதன் முதலில் கமாண்டர்கள் ஆன 7 விமானிகளில் இவரும் ஒருவர். ரோகன் ப்ளஸ் டூ படிக்கும்போதே விமானி ஆனவர்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment