Wednesday 20 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*நேர்மை*
ஓர் ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான்.
இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.
ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!
என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத் தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?
நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.
எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேர்மையின் தரம்… தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும்.
உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம்.
மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?
பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!
எழுத்தாளர், அ. முத்துலிங்கம்

No comments:

Post a Comment