Wednesday 18 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தையல் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த ஜெ.மாறன் படித்தது எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ. இவரது ஊர் முத்துப்பேட்டை, சென்னையில் சாலிடர் தொலைக்காட்சி தயாரிப்புப் பிரிவில் ஈராண்டு பணி. திருமணத்திற்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்து தொடர்ந்து ஒரே கட்டுமான நிறுவனத்தில் மூத்த மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார்.
உங்கள் ஊரைப்பற்றிச் சொல்லுங்கள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை எனது ஊர். அதனால் தான் என் பெயருக்கு முன் ஊர் பெயரை இணைத்துக்கொண்டேன். தென்னிந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக்காடுகள் எங்கள் ஊரில் தான் உள்ளது. பல்வேறு நாட்டினர் வருகைபுரியும் இது ஒரு சுற்றுலாத்தலம். வீட்டருகே தான் அங்கே செல்வதற்கான படகுத்துறையும் அமைந்துள்ளது. முத்துப்பேட்டை தர்கா உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமும் இங்கே சிறப்பு.
எந்த வயதில் வாசிப்பு பழக்கமாகியது:
ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வார இதழ்கள் வாசிக்கத்தொடங்கினேன். நானும் என் நண்பர்களும் ஆளுக்கு பத்து பைசா வீதம் போட்டு ராணி, தேவி போன்ற வார இதழ்கள் வாங்குவதுண்டு. அலைஓசை பத்திரிகையை தினம் என் தந்தையார் படிக்கத் தருவார்.
எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
1980 ஆண்டு முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பாரதியார் நூற்றாண்டு விழாவில் ஒன்றிய அளவில் இரண்டாமிடம் கவிதைக்காக பரிசு பெற்றேன். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது தஞ்சை மாவட்ட அளவில் நடந்த ஒரு கவிதைப்போட்டியில் மூன்றாம் இடம்.
பள்ளி கல்லூரிகளில் உங்கள் கவிதைகளுக்கு இருந்த வரவேற்பு பற்றி?
பள்ளி கல்லூரிகளில் என் காதல் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. துரதிஷ்டவசமாக 1983 -ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நான் சேர்த்து வைத்த கவிதைகள் அடித்துச் செல்லப்பட்டது.
கவிதைகளை அடித்துச் சென்றிருக்கலாம் அந்தக் காதல், காதலைப்பற்றிச் சொல்லுங்கள்?
ஒரு பணக்காரப் பெண் தேடி வந்து காதலைச் சொன்ன போது கவிதையாகத் தான் எழுத முடிந்தது. காதலை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாத வயசும் வளர்ப்பு முறையும். அதன் தாக்கம் கவிதையாய் பிரதிபலித்தது. பார்க்காதே என்னைப் பார்க்காதே என்ற கடைசி கவிதையோடு முடிந்தது அந்தக் காதல். ஆனால் இன்றும் எப்போதாவது பார்க்கும் போது காரிலிருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தே செல்கிறது அந்த பழைய காதல்.
எது எளிமையான கவிதை?
என்னைப் பொறுத்தவரை புதுக்கவிதையே எளிமையான கவிதையென்பேன். அதில் எதையும் எளிமையாக நமது கருத்துக்களை பதிவு செய்ய முடிகிறது. எளிதாக பலரையும் சென்றடைகிறது.
நிலாமுற்றம் தொடக்கம் பற்றி?
முகநூலில் பலரும் தன் சொந்தப் பக்கத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் எல்லோரையும் ஒரே தளத்தில் இணைத்தாலென்ன என்ற என்ற என் எண்ணத்திற்கு கொடுக்கப்பட்ட வடிவமே நிலாமுற்றம். மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கி உலகமெங்கும் இன்று கிளை பரப்பி 46000 உறுப்பினர்களோடு இயங்கிக்கொண்டிருக்கிறது நிலாமுற்றம். இரண்டு ஆண்டுவிழாக்களையும் திருச்சியில் 100 கவிஞர்களை ஒருங்கிணைத்து மாபெரும் கவியரங்கத்தையும் நடத்தியிருக்கிறது நிலாமுற்றம். கடல்கடந்து டென்மார்க்கில் கவியரங்கம் நடத்தியிருக்கிறது .
அடுத்த ஆண்டுவிழா எப்போது?
வரும் 30-09-2018 அன்று சுமார் 600 கவிஞர்களோடு மூன்றாவது ஆண்டுவிழா நடைபெறவுள்ளது. இலங்கை, ஜெர்மனி, டென்மார்க், சுவிர்ச்சலாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து கவிஞர்கள் வருகை தருகிறார்கள்.
விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
விமர்சனங்களை நாம் புகழின் உச்சிக்கு ஏறும் படிக்கல்லாகவே பார்க்கிறேன். நிறைய விமர்சனங்களை மூன்று ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து என்னை வளப்படுத்தியிருக்கிறேன். நம்மை விமர்சிக்க அவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்று பார்ப்பதுண்டு.
கடந்த மூன்று ஆண்டுகளாகவா, ஏன் அதிகப்படியான விமர்சனம்?
நிலாமுற்றம் தொடங்கிய பிறகே நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். நிலாமுற்றம் வளர்ச்சி பிடிக்காத சிலர் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். என்னோடு நிர்வாகத்தில் இருப்பவர்களால் எல்லாவற்றையும் முறியடித்து வந்துகொண்டிருக்கிறேன்.
நீங்கள் எழுதிய & தொகுத்த நூல்கள்?
நான் எழுதிய நூல் 'ஏதோ ஒரு ஞாபகம்', தொகுத்த நூல்கள் சொல்லழகு, தூரிகை,100-து கவியரங்கக் கவிதைகள்.
கவிமாலையில் சிறந்தநூலுக்கான விருது பெற்றதைப் பற்றிச் சொல்லுங்கள்?
என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். என் மகன் பிறந்தபோது பெற்ற ஆனந்தத்தை விட அதிகம் என்று சொல்லலாம். என் இல்லத்தாருக்கு மிக்க மகிழ்வான தருணம் அது.
நிலாமுற்றம் சந்திப்பு சிங்கப்பூரில் எப்போது?
வரும் செப்டம்பரில் சிறிய அளவிலான சந்திப்பு இடம்பெறும்.
பிடித்த ஒரு கவிதை ?
உழுதவன் கண்ணீரை
அழுதே துடைத்தது
மழை. (கவிஞர் கருணாகரசு)
பிடித்த சிறுகதை தொகுப்பு ?
அண்ணன் கீழை கதிர்வேல் அவர்களின் நம்பர் விளையாட்டு.
பிடித்த சிறுகதையாசிரியர் ?
சுந்தர ராமசாமி
பிடித்த கவிதை தொகுப்பு ?
மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள்
பிடித்த கவிஞர்கள் ?
கவிக்கோ, மு.மேத்தா வைரமுத்து.
ஏன் வாசிப்பு அவசியம் ?
ஒருவனை முழு மனிதனாக்குவது வாசிப்புப் பழக்கம் தான். வாசிக்கும் பழக்கமில்லாதவர்கள் சர்க்கஸ் குதிரை போல, வெளி அறிவு வளராது.
உங்களுக்கு வாசிப்பு எதை தந்தது ?
வாசிப்பு தான் எனக்கு நிறைய நண்பர்களை தந்துள்ளது. ஒரு நாளைக்கு நூறு கவிஞர்களின் பல்வேறுபட்ட கவிதைகளை படிக்கிறேன்.
பிறருக்கு கொடுக்க விரும்பும் பரிசு ?
அன்பும் ஊக்குவிப்புமே எனது பரிசாக இருக்கும்.
எழுத விரும்புவது?
சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை சிறார்களின் பாலியல் வன்முறையை கவிதைகளால் வடிக்க வேண்டும். இரத்தம் கொதிக்கும் அளவுக்கு எழுத்துகளால் கவிதையை எழுதவேண்டுமென நினைத்திருக்கிறேன்.
கடவுள் நம்பிக்கை உண்டா?
ஆரம்பத்தில் அதிக கடவுள் நம்பிக்கை இல்லை. ஒரு முறை ஆறு உடைப்பெடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மாற்றுத்துணி கூட எடுக்க முடியாமல் அருகில் உள்ள கோயிலுக்குள் தஞ்சம் புகுந்தோம். கோயிலுக்கு அருகேயும் நீர் பெருகிக்கொண்டிருந்தது. எல்லோரும் கருவறைக்குள் நுழைந்து வேண்டிக்கொள்கிறார்கள். பாய்ந்தோடி வரும் வெள்ளம் கோயிலுக்குள் வரவில்லை. அப்போது தான் அந்த தெய்வத்தின் சக்தி அறிந்தேன். ஒரு முறை ஊரில் பெரியப்பா இறந்து விட்டார், அப்போது தொலைபேசி வசதியில்லை. அவர் இறந்ததும் எனக்குத் தெரியாது, மதியம் அசைவ சாப்பாடு மூன்று முறை சாப்பிட முயற்சிக்கிறேன். உணவை வாயருகே கொண்டு செல்ல முடியவில்லை. இதையெல்லாம் பார்த்தே தெய்வ நம்பிக்கை அதிகம் எனக்கு ஏற்பட்டது.
வாழ்வின் சவாலகா மாறன் பார்த்தது என்ன?
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் சவால் தான். எனது தந்தையின் மரணத்தின் போதும் அதற்குப் பிறகும் உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டேன். யார் உதவியும் இல்லை தந்தையாரும் சொத்து எதையும் சேர்த்து வைக்கவில்லை. இருக்க சரியான வீடு இல்லை, தம்பி தங்கையை காப்பாற்ற வேண்டும், தாயை கலங்கவிடக் கூடாதென உழைத்தேன். எல்லா வசதிகளையும் சேர்த்தேன். இதுதான் நான் வாழ்வின் சவாலாக நினைத்தது.

No comments:

Post a Comment