Thursday 19 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மஹிஷா முகில்வண்ணன், சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் (சென்னை) பள்ளிக் கல்வியை முடித்து, இரசாயனப் பொறியியல் அண்ணாவில் கற்று இப்போது மீண்டும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) இரசாயனப் பொறியியலில் முதுகலை பட்டதாரி படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
சென்னையைப் பற்றிச் சொல்லுங்கள், சென்னையை எந்த அளவிற்குப் பிடிக்கும்?
மனம் சென்னையின் மீது கொண்டுள்ள நேசம், மெரினாவில் நீளமளவு.
அலைகள் கரையை தொட்டு தொட்டு செல்வது போல், சென்னையை தினம் எதற்காகவும் நினைப்பதுண்டு.
வாழ்க்கையை கற்றுத் தந்த அந்த ஊரையும், அன்பையும் பாசத்தையும் பொழிந்த அந்த மக்களையும் அவ்வளவு பிடிக்கும்.
வாழ்க்கையை கற்றுத்தந்ததா ?
பள்ளி, கணிதம், அறிவியல், மதிப்பெண்கள் என கடிவாளம் இட்ட குதிரை போலவே இருந்தது என் ஆரம்ப கல்வி நாட்கள். மிகப் பெரிய 'introvert'ஆக இருந்த என்னை, கற்று யாரிடமும், எந்த கூட்டத்திற்கு முன்பும் பேச தைரியம் கொடுத்தது சென்னையின் சூழல். நட்பு, அன்பு, அக்கறை, தலைமைத்துவம் போன்றவை, நடைமுறையின் வழியே கற்றுத் தந்தது. கூட்டத்தில் ஒருத்தியாக இருந்தேன், ஆனால் என்னை அமோகமாக வாழ வைத்து, படிக்கும் போதே ஒரு சர்வதேச இளைஞர் அணியில் தலைவியாகவும், தொழில்முனைவோருமாக ஆக்கியது.
நீங்கள் தலைமை வகித்த சர்வதேச இளையர் அணியின் பணியென்ன?
அந்த சர்வதேச இளைஞர் அணியின் பணி, என் போல் இளைஞர்களுக்கு வெவ்வேறு நாடுகளில் உள்ள சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் யுக்திகளையும் கையாளும் வாய்ப்பைத் தரும் ஒரு மேடையாக அமைந்துள்ளது. இதை செயல் படுத்தக் கூடிய அணியில் தான் தலைமை வகித்தேன்.
தொழில்முனைவராக இருந்ததைப்பற்றிச் சொல்லுங்கள்?
சிறு வயதில் இருந்தே என் அம்மா வீட்டிலேயே அவியப்பம் செய்வார். அந்த செயல்முறையை காண்பதே மிக அழகு, ஒரு விதமான மகிழ்ச்சியை தந்தது. வளர, வளர, நானும் அம்மாவிடம் இருந்து அதை கற்றுக் கொண்டேன். மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம் பயிலும் போதுதான் இதை ஒரு படி மேலே கொண்டு சென்று ஒரு 'home brand' ஆக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையோடும் தைரியத்தோடும் ஆரம்பித்தேன், கடவுள் புண்ணியத்தில் நன்றாகவே நடந்து வருகிறது, சுமார் இரண்டு ஆண்டுகளாய்.
படிப்பு முடிந்ததும் தொழில் முனைவராகத்தான் விரும்புகிறீர்களா?
கண்டிப்பாக! நானே என்னுடைய எஜமானியாக இருப்பதிலேயே எனக்கு சந்தோஷமும், திருப்தியும். படிப்பு சார்ந்த ஏதேனும் ஒரு பிரிவிலே தொழில் ஆரம்பிப்பது என் ஆசை. அதற்கான அடித்தளமாக எவ்வளவு முடியுமோ படிக்கிறேன், தொழில் உத்திகளை படிப்படியாக கற்று வருகிறேன்.
புத்தகங்கள் வாசிப்பதுண்டா?
இரண்டு வயதில் ஆரம்பித்து இன்று வரை புத்தகம் படிப்பதை ஒரு பழக்கமாக வைத்துள்ளேன். சமீபத்தில் படித்த புத்தகம், 'The God of Small Things' ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் 'நல்ல சோறு'.
எழுதுவதில் ஆர்வமிருக்கிறதா?
எழுதுவதில் ஆர்வம் அதிகம். ஒரு நாளில் நடக்கும் சுவாரஸ்யமான உரையாடல்கலையும் அதனை நான் காணும் கண்ணோட்டத்தையும் பதிவு செய்வது மிகவும் பிடிக்கும்.
மற்றபடி என் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை கதை போல எழுதுவதும் பிடிக்கும். அவ்வப்போது மனித உணர்வுகளை கோர்வையாக்கி சிறுகதைகள் எழுதுவேன். மற்றபடி எழுதுவதில் நான் மென்மேலும் நிறைய கற்றுக்கொள்ளவே ஆசை.
உங்களின் சிறுவயதில் சுவாரஸ்யமான விசயங்களைச் சொல்லுங்களேன்?
என் சிறு வயதில் இரண்டு விஷயங்களை விரும்பி செய்தேன். மொழிகள் கற்பது மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்குபெற மேடை ஏறுவது. தமிழ் என் தாய்மொழி அல்ல. எங்கள் வீட்டில் தெலுங்கு தான் பேசுவோம். இருப்பினும் இவ்வளவு தமிழுக்கும் காரணம் என் தாயார் தான். புத்தகங்களில் இருந்து படங்கள் வரை தமிழை வெவ்வேறு ஊடகங்கள் மூலம் அறிமுகம் செய்து பழக வைத்தார். தமிழ் மொழி போட்டி எதுவாக இருந்தாலும் முதலில் பெயர் தந்தது நானாகத்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு வார இறுதியில் ஏதாவது ஒன்றில் பங்கெடுப்பேன். தோல்வியை பாடமாகவே இத்தனை நாள் எடுத்துள்ளேன். ஆனால் வெற்றிகள் எனக்கு தந்த உற்சாகம் வேறு ஏதும் தரவில்லை. மேடைகளே என் வகுப்பரைகளுக்கு சமம் என்று கூட சொல்லலாம்.
இன்னொறு நினைவு. முதன் முதலில் தனியாக வெளியூர் சென்றது. ஜப்பானிற்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. சுருக்கமாக சொல்லப் போனால், இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிக்காமல் தனியாக செல்லத் தயார்! 😊.
சென்னை சேப்பாக்கம் நம்ம தோனிடானு விசில் அடித்ததுண்டா, மகிஷாவிற்கு கிரிக்கெட் தந்தது என்ன?
தோனிக்கு அடிக்காத விசில்கள் இல்லை! அவரை போல ஒரு நிலையான மனிதரை வாழ்க்கையில் கேள்விப்பட்டதில்லை. என் முன்மாதிரியே அவர் தான். கிரிக்கெட் பல விஷயங்களை தந்துள்ளது. பொறுமை, விட்டுக்கொடுத்தல், தட்டிக்கொடுத்தல், தலைமைப் பொறுப்பில் எவ்வாறு வழி நடத்தி செல்வது, மிக முக்கியமாக செய்யும் வேலையை எப்படி முழு மனதோடும், திருப்தியோடும் செய்ய வேண்டும் என்று. நல்ல நட்புகளையும் கிரிக்கெட் தந்துள்ளது!
கடவுள் மீதான நம்பிக்கை?
கடவுள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் கர்மாவின் மீது அதீத நம்பிக்கை உண்டு. நல்லதையே நினைத்து, வாழ்வோம் 😊.
பிறருக்க சொல்ல விரும்புவது?
உங்கள் வாழ்க்கையில் எது வேண்டுமோ அதை அடையும் வரை முயற்சி செய்யுங்கள். நேர்மையாக, பொறுமையாக உழைத்தால் அந்த வானம் கூட எல்லை இல்லை. அதே சமயம், சிரித்து, சந்தோஷமாக வாழுங்கள். வாழ்க்கை ஒரு முறையே, அதை நமக்கு பிடித்த விதத்தில் வாழ்வோம் 😊.

No comments:

Post a Comment