Tuesday 12 July 2022

நிறைகளைப் பாராட்டுங்கள்.

 நிறைகளைப் பாராட்டுங்கள்.

நல்லோரைக் காண்பதுவும் நன்றே:
நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே:
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே:
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
ஔவைப் பாட்டியின்
மூதுரைப் பாடல் இது.
நல்லதைக் காண்பது, கேட்பது, உரைப்பது, நல்லவர்களோடு சேர்ந்து இருப்பது-இப்படி நல்ல சூழலில் ஒருவர் இருந்தால் அவர் எப்போதும், எதிலும், எங்கும், யாரிடமும் நல்லதையே கண்பார். அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளே வரும். அவர் எண்ணமும் செயலும் எந்த நிலையிலும் நல்லனவாகவே இருக்கும்.
மகாபாரத்தில் ஓர் இடம். பிறவிக் குருடனான திருதராஷ்டிரன் தனது புத்திரர்களாக தருமனையும் துரியோதனனையும் அனுப்பி உலகமும் மனிதர்களும் எவ்விதம் இருக்கிறார்கள் என்று அறிந்து வரச் சொன்னார். தருமன் உலகையும் மனிதரையும் பார்த்து விட்டு
மக்கள் மிக நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்று கூறினான். ஆனால் துரியோதனன் வந்து
உலக மக்கள் மிகவும் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினான்.
நம்மிடையேயும் துரியோதனர்களும் தருமன்களும் இருக்கிறார்கள். துரியோதனர்கள் எப்போதும் எதிர்மறையாகவே உலகைப் பார்ப் பவர்கள். தருமன் போன்றோர் உடன்பாட்டு நோக்கில் உலகைக் காண்பவர்கள்.
விடிந்ததும் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று துடிதுடிப்போடு இருப்பவர் களுக்கு அடுத்தவர்களின் குறைகளைப் பார்க்க எண்ணமும் இருக்காது, நேரமும் இருக்காது.
ஆனால் வெறுமனே உட்கார்ந்து கொண்டு வெட்டியாய் இருப்பவர்களுக்கு அடுத்தவர்களின் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்வது முழுநேரப்பணி. இவர்களுக்கு அடுத்தவர்களின் நிறைகள் தெரியாது, குறைகள் மட்டுமே தெரியும். நிறைகளைப் பாராட்டுவது இவர்கள் நோக்கமல்ல. குறைகளை விமர்சிப்பதுதான் ஒரே நோக்கம்.
நம் அகத்தின் எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மை வளப்படுத்தும் நல்வித்தாக அமையட்டும்.

No comments:

Post a Comment