Wednesday 26 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

காலை வ​ணக்கம்”. இந்த இனிய சொற்களுடன் இன்று காலை என்னைத் தனது பேருந்துக்குள் வரவேற்றார் எஸ்எம்ஆர்டி சேவை எண் 966-ன் ஓட்டுநர் திரு ஈஸ்வரன். பேராக், ஈப்போவைச் சேர்ந்தவர். வயது 53.
காலை வெயில் உண்டாக்கிய வேர்வை வெறுப்புடன் ​பேருந்தில் ஏறிய எனக்கு புன்னகை கலந்த அவரது தமி​ழ் வரவேற்பு அத்தனை இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. பேருந்தில் ஏறும் ஒவ்வொரு தமிழருக்கும் காலை வணக்கமும் பிறருக்கு Good Morning​-ம் அவர் கூறுவதைப் புன்னகையுடன் கவனித்தேன்.
நேற்றுதான் Neither Civil Nor Servant என்ற நூலை வாசித்து முடித்தேன். சிங்கப்பூரின் தலைசிறந்த அரசாங்க ஊழியர்களுள் ஒருவராகக் கருதப்படும் திரு ஃபிலிப் இயோவின் அசாதாரணமான பணிகளைச் சித்தரிக்கும் அற்புதமான நூல். செய்யும் பணியை, அது எதுவாக இருந்தாலும், பற்றோடும் பரவசத்தோடும் செய்வதுதான் திரு ஃபிலிப்பின் தாரக மந்திரம். திரு ஃபிலிப் நம்பும் பற்றையும் பரவசத்தையும் இன்று நான் திரு ஈஸ்வரனிடம் கண்​டேன்.
பல மணி நேரம் பேருந்து ஓட்டுவது சுலபமான பணியல்ல. அதைச் செய்துகொண்டே பயணிகளை இனிமையுடன் வரவேற்கும் இவரைப் போன்றவர்கள் நமது அன்றாட அனுபவங்களுக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்; நமது சொந்தப் பணிகளை இன்னும் எப்படி பற்றோடு செய்ய வேண்டும் என்பதற்கான உத்வேகத்தையும் தருகிறார்கள்.
இனிமையான பயண அனுபவத்துக்கு நன்றி திரு ஈஸ்வரன். 🙏
நன்றி அழகிய பாண்டியன்


No comments:

Post a Comment