Wednesday 19 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*"மன நலம், உடல் நலம்.’’*
உலக சுகாதார மையம் என்ற அமைப்பு சொல்கிறது.
"உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் என குறிப்பிட முடியும்" என்கிறது.
ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மனதளவில் மகிழ்ச்சியில்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.
இந்த விஷயம் பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர்.
உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்;
அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.
விபத்து, நோய்த் தொற்று, ஜுரம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் என உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுவதைப் போலவே, மனதுக்கும் பல்வேறு தீங்குகள் தினம் தினம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அதாவது இருநூறுக்கு மேற்பட்ட மன நோய்கள் இருக்கிறதாம்.
இவையெல்லாம் நம் மனதை தினம் தினம் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், 'மனம்' எனும் ஒரு விஷயம் கண்ணுக்குத் தெரியாத காரணத்தால், பெரும்பாலும் இவையனைத்தும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. ஆனால், அதனால் ஏற்படும் ஆபத்துகள் பல!
ஒருவருக்கு அடிபட்டு ரத்தம் வந்தாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்.
ஆனால், அவருக்கு, மன உளைச்சல் - மனச்சோர்வு மற்றும் உணர்வுகள் ஏற்படுத்தும் காயம் போன்றவற்றுக்கு 'அது தானாவே சரியாப் போயிரும்' என பிறரால் அறிவுறுத்தப் படுகின்றன.
இதில் இரண்டு பாதிப்புகளின் தீவிரமும் ஒன்றுதான்; ஆனால் முதலாவது கவனிக்கப்படுகிறது. இரண்டாவது கவனிக்கப் படுவதில்லை என்பதே நிதர்சனம்.
ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும்.
நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட முடியும். அப்படிப்பட்டோர் தங்கள் உணவு, தூக்கம், உடற்பயிற்சிப் பழக்கம் போன்றவற்றைச் சரியாகச் செய்வார்கள்.
ஆனால், சிகரெட், குடி மற்றும் போதைப் பழக்கத்தை தவிர்த்து விடுவார்கள். அப்படி இருந்தால்தான் தன் குடும்பத்தை சரிவர வழி நடத்த முடியும்.
சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.
எனவே, இன்றிலிருந்தாவது விழிப்புணர்வு அடைந்து மனநலம் பேணுவோம், வாழ்வை சிறக்கச் செய்வோம்.
நன்றி அருண்குமார்

No comments:

Post a Comment