Thursday 27 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்ல எண்ணங்களை எப்படி வளர்த்துக் கொள்வது?
மனிதர்கள் சந்தோஷமாகவும், சந்தோஷமில்லாமல் இருப்பதற்கும் காரணம் அவர்களுடைய எண்ணம்தான். அவர்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை பொருத்துதான் அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி அல்லது கவலை இருக்கும். தோல்வியடைவது போன்ற எண்ணங்களும், கவலைகளும் மனதில் குடியிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் ஒரு வெறுப்புதான் ஏற்படும்.
எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். நீங்கள் உங்களை வலிமையானவராக நினைத்தால் வலிமையானவர்களாக மாறுவீர்கள். பலவீனமாக நினைத்தால் பலவீனமாகி விடுவீர்கள்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் தொடங்கிய காரியம் வெற்றியடையும் நிச்சயமாக தோல்வி அடையமாட்டேன். அப்படியே தோல்வி அடைந்தாலும் அந்த தோல்வி நிரந்தரமானது அல்ல. அந்த தோல்வி தந்த பாடத்தை ஆராய்ந்து நிச்சயம் அடுத்து வெற்றியடைவேன் என்று எண்ணிப் பாருங்கள். உடனே உங்கள் மனநிலை ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு சந்தோஷமான எண்ணத்தில் இருப்பீர்கள்.
அதேபோல, கடமைகளை மனப்பூர்வமாகச் செய்தால் உரிமைகள் உங்களை தேடி தானாக வரும். கடமைகளை செய்யாமலே உரிமைகளை தேடினால் அவை கானல்நீர் போல் ஆகிவிடும். உரிமைகளை மட்டும் எண்ணிய எவரும் சமுதாயத்தில் மேன்மை அடைந்ததில்லை. கடமைகளை கருதியவர்களே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் யாரும் தாழ்ந்தவருமில்லை, உயர்ந்தவருமில்லை. உயர்வு, தாழ்வு என்ற எண்ணத்தை நம்மிடம் இருந்து அகற்ற வேண்டும். நம்மைவிடச் சிலர் தாழ்ந்தவர்கள் என்று நாம் கருதும்போது நம்மிடம் தீமையே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த தீமையை நாம் ஒழிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.
எண்ணங்கள் ஏன் இப்படி தோன்றுகிறது ?
மற்ற உயிரினங்களை போலவே தன் உயிர் காப்பது, இரை தேடுவது, இனப்பெருக்கம் செய்வது என்ற அடிப்படையில்தான் மனித மூளையும் செயல்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்டமாக மனிதனுக்கு மட்டும் மூளையில் தோன்றும் உணர்வுகள் அச்சம் மற்றும் கோபம். அதனால்தான் நம் மூளை இவை இரண்டையும் தேடிப் பிடித்து உள்வாங்கிக் கொள்கிறது.
மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.
அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை. அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.
எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்! வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.
நம்மால் நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் மாற்ற முடியும் !
மூளையும், மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம் !!
உடல் பலத்தினால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஆன்மபலமே வெற்றி தரும் !!!
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

No comments:

Post a Comment