Wednesday 21 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வீடு முதல் காடு வரை இலவசம்! - சாவு வீட்டின் கண்ணீரைத் துடைக்கும் கோவை சாமானியர்!
மாற்றுத்திறனாளி மட்டுமல்ல; தன்னம்பிக்கையை விதைக்கும் நன்னம்பிக்கை மனிதர். இளமையைக் கசக்கிப் பிழிந்த ஏழ்மை, சக்கர நாற்காலியில் மட்டுமே சுழலும் வாழ்க்கை, சுற்றியிருப்பவர்களின் வசை, எள்ளல், தூற்றுதல். எல்லா தடைகளையும் தகர்த்து, தனக்கென தனிப்பாதையை வகுத்து எல்லாருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார் செல்வராஜ். இவரின் சேவை புதிதானது; அவசியமானது.
கோவை, விளாங்குறிச்சிப் பகுதியைச் சுற்றியிருக்கும் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்குள் யார் இறந்தாலும், ஒரு போன் செய்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘வீடு முதல் காடு வரை...’ தேவையான அனைத்தும் ‘AEG கிருஷ்ணசாமி நாயுடு நினைவு அறக்கட்டளை’ சார்பாக வந்துவிடும். இதன் நிறுவனர்தான் செல்வராஜ்.
ஒவ்வொரு சடங்கையும் செய்பவர்களை ஏற்பாடு செய்து தருகிறார். தேவைப்பட்டால் ஆம்புலன்ஸ் வசதி, மின்மயானத்தில் முன்பதிவு செய்வது, மருத்துவச் சான்றிதழ் பெற்றுத்தருவது... என இறந்தவரின் குடும்பத்தில் ஒருவரைப்போல அனைத்து காரியங்களையும் முன் நின்று நடத்துகிறார். இதற்காக ஒரு பைசா கூட செல்வராஜ் வாங்குவதில்லை!
கடந்த நான்கு வருடங்களில் 6800 வீடுகளுக்கு இந்தச் சேவையை செய்திருக்கிறார். மட்டுமல்ல, உதவியாளரின் துணையுடன் 4000 வீடுகளுக்குப் போய் துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார். மயானம் வரைக்கும் சென்று தனது அஞ்சலியையும் செலுத்தியிருக்கிறார் இந்த 54 வயது மனிதர். ‘‘கோவை சௌரிபாளையத்துல பிறந்தேன். ரெண்டாவது வரைக்கும் படிச்சேன். மேல படிக்க வசதியில்ல. சைக்கிளுக்கு காத்து அடிக்கறதுல ஆரம்பிச்சு ரியல் எஸ்டேட் வரைக்கும் ஏகப்பட்ட வேலைகளைச் செய்துட்டேன். இரவு பகல் பாராம உழைச்சேன். கைல கொஞ்சம் காசு சேர்ந்துச்சு. கல்யாணம், வீடு, கொழந்தைன்னு செட்டில் ஆனேன். வாழ்க்கை சந்தோசமா போயிட்டு இருந்துச்சு...’’ சிறிது நேரம் மௌனம் காத்த செல்வராஜ் தொடர்ந்தார்.
‘‘ஒரு விபத்துல என் முதுகுத்தண்டு நசுங்கிடுச்சு. கழுத்துக்குக் கீழ எந்த உறுப்பும் செயல்படலை. இனிமேல் எழுந்து நடக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. ஒரே நாள்ல வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சு. அடுத்து என்ன செய்றதனு தெரியல. ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு. ஆனா, மனசை தளர விடல. எங்கயும் நகர முடியாம ஒரே இடத்துல சுழன்றுட்டு இருந்த வாழ்க்கையும், நான் சந்திச்ச மனுஷங்களும் எனக்கு நிறைய கத்துக் கொடுத்தாங்க. இனியும் முடங்கி கிடக்கறதுல எந்த அர்த்தமும் இல்லனு முடிவுக்கு வந்தேன்.
பணம் சம்பாரிக்கிறதை தாண்டி மத்தவங்களுக்காக ஏதாவது செய்யணும்னு மூளையை கசக்கிட்டே இருப்பேன். அப்பத்தான் இந்த யோசனை வந்துச்சு...’’ அனுபவ மொழி பேசும் செல்வராஜ், தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து, அதன் பாதையையே மாற்றி அமைத்த சம்பவங்களையும் நினைவுகூர்ந்தார். ‘‘கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எங்க ஊருக்குப் பக்கத்துல வாட்ச்மேன் ஒருத்தர் தற்கொலை செஞ்சுகிட்டார். என்ன காரணம்னு அக்கம்பக்கத்துல விசாரிச்சப்ப பக்குனு இருந்தது. அவரால வீட்டு வாடகை சரியா கொடுக்க முடியலை.
வீட்டு ஓனர் அவரை ஏதோ சொல்லியிருக்கார். அந்த அவமானம் தாங்காம தூக்குப் போட்டுட்டார்னு சொன்னாங்க. பிரேதத்தை மயானத்துக்குக் கொண்டு போக வண்டிக்கு ரெண்டாயிரம் வேணும். துக்கம் விசாரிக்க வர்றவங்க உட்கார சேர் போடணும். டீ, காபி தரணும். அதுக்கும் ரெண்டாயிரம் ஆகும். இந்த நாலாயிரம் அவர்கிட்ட இருந்திருந்தா வாடகையைக் கொடுத்துட்டு வாழ்ந்திருப்பார். கைல காசில்லாம இறந்தவரோட மனைவியும், கொழந்தைகளும் நடு வீட்ல பிரேதத்தை வைச்சுகிட்டு நிராதரவா நின்னாங்க.
அவங்க தவிப்பு என்னை ஏதோ பண்ணுச்சு. யாரையும் விட இந்த மாதிரியான ஆட்களுக்குத்தான் நம்ம உதவி தேவைப்படும்னு ஆழ்மனசு சொல்லுச்சு...’’ மனதை திறந்து பேசுகிற செல்வராஜ் யாரையும் எதிர்ப்பார்க்காமல், தாமதிக்காமல் கையிலிருந்த பணத்தைப் போட்டு களத்தில் குதித்துவிட்டார். ‘‘அந்த வாட்சுமேனோட குடும்பம் மட்டுமல்ல, வேறு யாரா இருந்தாலும் தன் வீட்ல ஒருத்தர் இறந்துட்டா இப்படித்தான் தடுமாறுவாங்க. இறந்தவரின் வீட்ல முதல்கட்டமா நிழலுக்காக சாமியானா பந்தல் அமைக்கணும். பிரேதத்தைப் பாதுக்காக்க ஃப்ரீஸர் பாக்ஸை வாடகைக்கு எடுக்கணும்.
இப்படி ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. உடனடியா செஞ்சாகணும். தள்ளிப்போட முடியாது. இதுக்கு குறைந்தபட்சம் கைல பத்தாயிரம் ரூபாயாவது இருக்கணும். இறந்தவரோட வீட்ல அந்த நேரத்துல பணம் இருக்குமான்னு தெரியாது. நிறையபேர் கடனை வாங்கித்தான் இந்த காரியங்களை செய்றாங்க. இது சாவு விழுந்த வீட்ல நடக்கிற இன்னொரு வேதனையான விஷயம்...’’ வருந்துகிற செல்வராஜின் கரங்கள் ஏழை, எளியவர்களை நீண்ட நாட்களாகத் துரத்திக்கொண்டிருந்த இந்த வேதனையை துடைத்துவருகிறது.
‘‘சாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரர்னு எந்த பாகுபாடும் இல்ல. யார் கூப்பிட்டாலும் போவோம். இதுக்காகவே எங்ககிட்ட எட்டு பேர் மாச சம்பளத்துக்கு வேலை செய்றாங்க. ஒரே நாள்ல 40 வீட்டுக்கு சேவை செய்ற அளவுக்கு மெட்டீரியல் இருக்கு. நாங்களே பந்தல் கட்டி, சேர்களை வரிசையா போட்டு, டியூப் லைட்டையும் மாட்டிக்கொடுத்துடுவோம். முதல் மூணு நாளைக்கு இந்த சேவை முற்றிலும் இலவசம். இறந்தவங்க வீட்ல விருப்பப்பட்டு கொடுக்கிற நன்கொடையை அறக்கட்டளை சார்பா வாங்கிக்கிறோம். நூறு ரூபா கொடுத்தவங்களும் இருக்காங்க. லட்ச ரூபாய் கொடுத்தவங்களும் இருக்காங்க.
இதை தொடர்ந்து செய்யணும். ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கணும். அதுக்கு பொருளாதாரம் முக்கிய தேவையா இருக்கு. அதனால 12ம் நாள் மற்றும் மத்த காரியங்களுக்கு குறைந்த வாடகைல பொருட்களை தர்றோம். இந்தப் பணிக்கு என் மனைவி சாவித்திரியும், மகன் கௌதமும் உறுதுணையாக இருக்காங்க. அவங்க இல்லைன்னா இதை என்னால நினைச்சுக்கூட பார்த்திருக்க முடியாது.
ஆரம்பத்துல ‘செத்தவங்களுக்கு செய்றதுல என்ன பயன்? உயிரோட இருக்கறவங்களுக்கு ஏதாவது பண்ணலாமே...’னு பலபேர் பலவிதமா சொன்னாங்க. ஆனா, நான் எதையும் கண்டுக்கல. உண்மையைச் சொன்னா, உயிரோட இருக்கறவங்களுக்குத்தான் பண்றேன். வாட்ச்மேனோட மனைவி, கொழந்தைகள் மாதிரி நிராதரவா நிற்கிறாங்களே அந்த அப்பாவி ஜனங்க, அவங்களுக்காகத்தான் இதைச் செய்றேன்...’’ நெகிழ்கிற செல்வராஜின் கனவு இந்தச் சேவையை கோவை மாவட்டம் முழுவதும் விரிவாக்க வேண்டும் என்பதே.
- த.சக்திவேல், படங்கள்: க.சர்வின்
----- மேலும் தகவல்களுக்கு visit http://nammacoimbatore.in/ அல்லது "நம்ம கோயம்புத்தூர்" Android App - ஐ playstore - ல் nammacbe என search செய்து Download செய்யுங்கள்,
https://play.google.com/store/apps/details…
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment