Saturday 17 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"முதுமை தரும் ஞானம்"
40 வயதிலிருந்து 50 வயது வரை பொறுப்புக்களின் சுமைகள் தலையை சுற்ற வைக்கும். வாழ்க்கையின் துரோகங்களும் வலிகளும் புலப் பட ஆரம்பிக்கும். அதன் பலனாய் உடல் உபாதைகள் திடீர் திடீரென்று புதிது புதிதாய் முளைக்க ஆரம்பிக்கும். அது வரையில் கற்ற பொறுமை ஆட்டம் காணும். மெதுவாக முதுமை படர ஆரம்பிக்கையில் எது உண்மையான நட்பு, எது உண்மையான சொந்தம் என்ற உண்மை நிலை புரி பட ஆரம்பிக்கும். வளர்த்த குஞ்சுப் பறவைகள் அவரவர் கூட்டுக்குப் பறந்து சென்ற பிறகு வாழ்க்கையின் யதார்த்தம் முகத்தில் அறையும்.
உடலும் மனமும் முதிர ஆரம்பிக்கும் நிலை தான் முதுமை! ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள், சுமைகள், கடமைகள் எல்லாவற்றையும் முடித்து நிமிரும் போது, ஒவ்வொருத்தரும் எதிர் நோக்கும் நிலை இது! அலைக்கழிக்கும் உடல் நோய்கள், அது வரை இருந்த முக்கியத்துவங்கள் குறைந்து அதனால் ஏற்படும் மனச் சோர்வு, மோசமான அனுபவங்களிலிருந்து பீடிக்கும் மனத்தளர்வு - இவை எல்லாவற்றையும் சமாளிக்க மனத் தெம்பை மறு படியும் முழு பலத்தோடு கொண்டு வர வேண்டிய நிலை இது!!
உடம்பு எப்படியிருந்தாலும் மனசை இளமையாக வைத்துக் கொண்டால் மட்டுமே மிச்சமிருக்கும் நாட்களை அமைதியாக கழிக்க இயலும். உடலுக்கு மட்டும் தான் முதுமை. வாழ்க்கையில் மறந்து போன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கவும் தயாராகும் போது மனமும் என்றுமே இளமையாக இருக்க ஆரம்பிக்கிறது.
‘ மனிதனுக்கு வயதாவதேயில்லை அவன் எதையாவது மகிழ்வோடு தேடிக் கொண்டேயிருந்தால்’ என்கிறது ஒரு பழமொழி. உண்மை தான்! இது வரை இயந்திர கதியாக உழைத்துக் கொண்டிருந்த மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கிடைத்திருப்பதை அனுபவித்து ரசிக்க வேண்டும். காலை நேரத்தில் நடைப் பழக்கம் வைத்துக் கொள்வது சுற்றிலும் உள்ள தூய்மையான காற்றை சுவாசிக்க வைப்பதுடன் வைகறையின் அழகை ரசிக்க வைக்கிறது.
உங்கள் பேரனையோ, பேத்தியையோ கொஞ்சி மகிழ்ந்து பாருங்கள். அந்த சிறு குழந்தையின் மென்மையான அசைவுகளையும் மழலையையும் ரசித்துப் பாருங்கள். இது வரை புலப் படாத அழகின் தரிசனம் கிடைக்கும். மனது சிறு குழந்தையின் உலகிற்குச் சென்று வரும்.
இளம் வயது சிறுவர்களை அவர்கள் உலகிற்குச் சென்று ரசியுங்கள். உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும், உங்கள் அறிவுரைகள் அவர்களுக்குத் தேவை தான். ஆனால் அதை அவசியமான சமயத்தில் மட்டுமே உபயோகியுங்கள். மற்ற நேரங்களில் அவர்களுக்கு உற்ற தோழனாக இருங்கள்.
மனதை அமைதியாக்கும் சக்தி கலைகளுக்கு உண்டு. இது வரை வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களினால் மறந்து போன உங்கள் கலைத்தாகங்களுக்கு உயிர் கொடுங்கள். இசை, ஓவியம், தியானம், கவிதை- இப்படி எத்தனையோ வடிகால்கள் மனதை அமைதிப் படுத்த காத்திருக்கின்றன.
உங்களை முதுகில் குத்தி, மனதில் சிலர் கடந்த காலத்தில் ரத்தக் காயங்களை உண்டு பண்ணியிருக்கலாம். அதையே நினைத்து நினைத்து மருகுவதை தவிர்த்து விடுங்கள். ‘ இதுவும் கடந்து போகும்’ என்று நினைத்து அவற்றை ஒதுக்கி வையுங்கள். கோபத்தை நீக்குவதும் நாவடக்கமும் இந்த வயதில் மிக முக்கியம்.
இந்த வயது வரை நினைத்ததை சாப்பிட்டு ரசித்து உண்டு நாட்களை கழித்தாகி விட்டது. இனியேனும் ஆசைக்கும் பற்களுக்கும் வயிற்றுக்கும் ஓய்வு கொடுங்கள். இது மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியத்தைத் தள்ளி வைக்கும். இந்த நாவடக்கமும் வாழ்க்கையில் மிகத் தேவையான ஒன்று!
இறுதியாக பொருளாதார பலம். வாழ்க்கையில் அடுத்தவர்களுக்கான தியாகங்களும் தானமும் நிச்சயம் நமக்கு மன நிறைவைத் தரும்தான். கருணையும் அன்பும் வாழ்க்கையில் முதலாவதான அருமையான விஷயங்கள்தாம்! ஆனால் நம் முன்னோர்கள் ‘ தனக்குப் பின் தான் தான தர்மம்!’ என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்! முதுமையில் யாசகம் என்பது மிகக் கொடுமையான விஷயம். உங்களுக்கென்று இறுதிக் காலம் வரை யாருடைய கையையும் எதிர்பாராத வகையில் ஒரு சேமிப்பு உங்களையும் உங்களின் தேவைகளையும் நிம்மதியாய் வைத்திருக்க அவசியம் தேவை!!
"வாழ்க வளமுடன்"
எந்நாளும் இனியநாளே!

No comments:

Post a Comment