Saturday 22 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கடத்தலுக்கு துணை...
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிரடியாக சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த 30 பேர் கொண்ட கூலிப்படை..
சுங்கத்துறை அதிகாரிகள் துணையுடன் வெளி நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர் சென்னை சர்வதேச விமான நிலைய போர்டிகோ பகுதியில் நின்று சுங்கச் சோதனை முடிந்து வெளியில் வரும் பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேக நபர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் இலங்கை, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 18 பேர் மீது சந்தேகம் வந்தது. அவர்கள் தங்கம் மற்றும் மின்னணு சாதன பொருட்களுடன் வெளியில் செல்வது தெரியவந்தது. மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் அந்த 18 பேரையும் விமான நிலையத்தில் உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுவதுமாக சோதனையிட்டனர். அப்போது சூட்கேஸ், உள்ளாடைகள், ஆசன வாய் பகுதியில் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் அவர்களிடம் இருந்து 12.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ₹5.5 கோடி. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த 18 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இவர்கள் 18 பேரும் கடத்தல் குருவிகள் என்றும், அடிக்கடி வெளி நாடுகளுக்குச் சென்று இதுபோல் தங்கம் கடத்தி வருவது வழக்கம் எனவும் தெரியவந்தது.
மேலும், சுங்க சோதனையில் இது கண்டு பிடிக்கப்படாமல் தங்கக்கட்டிகளை வெளியில் கொண்டு வந்தது எப்படி என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, சுங்கத்துறை அதிகாரிகள் சிலரே இவர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதும், சுங்கச்சோதனை நடத்தாமலேயே அவர்களை வெளியில் அனுப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தங்கள் விசாரணையை சுங்கத்துறை அதிகாரிகள் பக்கம் திருப்பினர். அதில் 5 சுங்கத்துறை அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் இரவு வரை துருவி, துருவி விசாரித்தனர். அப்போது சுங்கத்துறையில் உள்ள ''பிரிவியன்டி'' அதிகாரிகளான குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த விகாஸ், கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜன் ஆகிய 2 அதிகாரிகள் இந்த கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்கள் அலுவலகத்துக்கு நள்ளிரவில் கொண்டு சென்று விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அடுத்ததாக விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் ஆசாமிகள் 18 பேரையும் தியாகராய நகரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு செல்வதற்காக விமான நிலைய வெளிப் பகுதியில் உள்ள வேனில் ஏற்ற முயன்றுள்ளனர். அப்போது கடத்தல் ஆசாமிகளுக்கு ஆதரவாக சுமார் 30 பேர் கொண்ட கூலிப்படை திடீர் என திரண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை வழிமறித்து அவர்களை தாக்கியுள்ளனர்.
அதற்குள் சுதாரித்த அதிகாரிகள் மர்ம கும்பலை எதிர்த்து சண்டையிட்டனர். அதற்குள் இந்த சம்பவம் குறித்து தெரிந்த பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மர்மகும்பலை சுட்டு பிடிக்க முயன்றனர். அதோடு கைது செய்யப்பட்ட கடத்தல் ஆசாமிகள் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிடவே கடத்தல் ஆசாமிகள் 18 பேரில், 4 பேரை 30 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் மீட்டு சென்று விட்டது. மீதி 14 பேரை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அதோடு மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரியான பிருதிவிராஜ் சென்னை விமான நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் விமான நிலைய போலீசார் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு அந்த கும்பலை தேடிவருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த சென்னை விமான நிலையத்தில் சினிமாவில் வருவது போல மர்மகும்பல் ஒன்று அதிகாரிகளை தாக்கிவிட்டு 18 பேரை கடத்த முயன்ற சம்பவம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விமான நிலையப் பகுதியின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என தினகரன் பதிவு செய்துள்ளது.
என்ன நடக்கிறது நாட்டில்..?என்ன துணிவும்,பின் புலமும் இருந்தால் இப்படி செய்வார்கள்?
ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான், நம் நாட்டின் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, நீதி பரிபாலனம் நடைபெற்று வருகிறது. இது மறு பரிசீலனை செய்ய வேண்டுமோ..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment