Tuesday 15 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

‘’எதற்கும் ஒரு காலம் வரும்"..
......................................
ஒருவர் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் நாமும் அவரிடம் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை.
இந்தப் பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத்தன்மை. ஒரு செயலை வெற்றிகரமாக சாதிக்க வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை அவசியம் வேண்டும்.
அந்த சகிப்பு தன்மை இருந்தால் தான் நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அமைதியும் கிடைக்கும் ..
குடும்பம் தொடங்கி நாடு வரையில் அனைத்து இடங்களிலும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டால் அரிய பல செயலை சாதிக்கலாம்..
முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள முரடன் ஒருவன், உணவகத்திற்குள் வந்தான்.
அவனைப் பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் ஓடி விட்டார்கள். முல்லா இதைக் கவனித்தார்.
இருந்தாலும், அந்த முரடனைப் பார்த்து பயப்படாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
முல்லாவின் அருகில் வந்த முரடன், முல்லாவின் தலைப்பாகையை தட்டி விட்டுச் சென்றான். இப்படி ஒருமுறை அல்ல. ஒவ்வொரு நாளும் முல்லா வழக்கமாக அந்த உணவகத்திற்குச் சாப்பிட வரும்போதெல்லாம்,
அந்த முரடன் வந்து முல்லாவின் தலைப்பாகையை தட்டி விட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்தான்.
இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் முல்லாவிடம் வந்து, “உங்களுக்கு இந்நாட்டு அரசர் நண்பர் தானே, .இந்த முரடனைப் பற்றி மன்னரிடம் சொன்னால் எல்லோருக்கும் நிம்மதியல்லவா?” என்றார்கள்.
அதற்கு முல்லா, ''அந்த முரடனிடம் விரோதம் எதற்கு?. ஒருவேளை அவன் தண்டனையில் இருந்து விடுதலை ஆன உடன், நான் அவனுக்கு எதிரியாகத் தெரிவேன். எனது வேலை அவனுடன் மோதிக் கொண்டு இருப்பதல்ல.” என்றார்.
அப்படி என்றால் இந்த முரடனின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது” எனக் கேட்டனர் மக்கள்.
“எதற்கும் ஒரு காலம் வரும்" என்றார் முல்லா.
ஒருநாள். வழக்கம் போல உணவகம் வந்து கொண்டிருந்தார் முல்லா. எதிரே மன்னரின் காவலரும் வந்து கொண்டு இருந்தார். முல்லாவும் அந்தக் காவலரும் நண்பர்கள்.
தன்னுடன் வந்து சிற்றுண்டி சாப்பிடும்படி காவலரை அழைத்தார் முல்லா. அவரும் சம்மதித்து இருவரும் உணவகத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.
அப்போது, அந்த முரடன் வருவதை கவனித்து விட்டார் முல்லா. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது நண்பரான மன்னரின் காவலரிடம்,
“நண்பரே என்னுடைய தலைப்பாகை உங்களுக்கு
அழகாக இருக்கும். அணிந்து பாருங்கள். ” என்றார் முல்லா. காவலரும் முல்லாவின் தலைப்பாகையை அணிந்தார்.உடனே முல்லா, ”இங்கேயே உட்கார்ந்து இருங்கள்.
இதோ வந்து விடுகிறேன்.” என்ற முல்லா, அங்கு இருந்து நழுவினார். முரடன் வந்தான். வழக்கமாக முல்லா அமர்ந்து இருக்கும் இருக்கையில் மன்னரின் மெய்க்காவலர் அமர்ந்து இருப்பதை கவனிக்காமல்,
தலைப்பாகையை பார்த்து முல்லா தான் அமர்ந்து இருப்பதாக நினைத்து தலைப் பாகையை தட்டி விட்டான் முரடன். மன்னரின் மெய்க்காவலருக்கு வந்ததே ஆத்திரம். தனது வாளை உருவி முரடனின் தலையை ஒரே சீவாக சீவிக் கொன்றார்.
இதைப் பார்த்த மக்கள் மகிழ்ந்தார்கள். முல்லாவைப் பாராட்டிப் பேசினார்கள்.
ஆம்.,நண்பர்களே..,
மனித குலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாகக் குறைந்தபட்சம் "சகிப்புத் தன்மை" ஆவது நம்மிடையே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment