Friday 15 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்து பேசிவிடமுடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர்.
ஒருமுறை பெரியாரை காண சுதேச கிருபளானி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் #பெரியார்.
இதை குறிப்பிட்ட கிருபாளினி,
"நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்று கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார்.
அதற்கு பதில் கூற பெரியார் குறுக்கே புகுந்த அண்ணா,
" 'விபூதி அணிந்தவன் சிவபக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாக போட, அமைதியானார் கிருபளானி. அதுதான் அண்ணாவின் நாவன்மை.
1963-ல் #அண்ணா மாநிலங்களவைக்கு தேர்வாகி சென்ற அண்ணாவின் முதல் கன்னிப் பேச்சை கேட்டு “நான்சென்ஸ்’ என்று அண்ணாவை கண்டித்த அதே நேரு, உணர்ச்சிவயப்பட்டு ‘அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.பேசவிடுங்கள் என சபாநாயரை கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது.
'#சென்னை_மாகாணம் என்பதை #தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அண்ணா, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.
காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என் லிங்கம் என்ற உறுப்பினர்,
"தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட போகிறீர்கள்?" என்று கேட்டார் .
“நாடாளுமன்றத்திற்கு லோக்சபா என்றும், மக்களவைக்கு ராஜ்யசபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கீறீர்களே. இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்றதும் பதிலேதுமில்லை எதிர்கட்சியிடமிருந்து.
1967-தமிழக சட்டமன்றதேர்தலில் அறுதி பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது திமுக. பதவி ஏற்பதற்கு முன்தினம், தனது நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா.
“தவறு செய்துவிட்டோம். இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது. இன்னும் சில காலம் நாம் பொறுத்திருந்திருக்கவேண்டும்.
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே நம்மை நம்பி துார எறிந்துவிட்டு நம்மை தேர்ந்தெடுத்து உள்ளனர் மக்கள். நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பதை எப்படி நிறைவேற்றுவது” என தன்னை வாழ்த்த வந்த கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களிடம் புலம்பினார்.
ஒரு சமயம் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அண்ணாவிடம், "மிருககாட்சி சாலைக்கு நான் தந்த ஆண்புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால்#எம்ஜிஆர் தந்த பெண்புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்ப்படுகிறது" என்று குற்றஞ்சாட்டிப்பேச,
உடனே குறுக்கிட்ட அண்ணா "சம்பந்திகள் இருவரும் உட்காரந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்னையை” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது .
'சென்னை மாகாணத்தக்கு தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டு அது விழாவாக கொண்டாடப்பட்ட அன்று வாந்தியும் மயக்கமுமாக சோர்ந்திருந்தார் அண்ணா. மருத்துவர்கள் அந்த விழாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்க, கோபத்துடன்,
"என் தாய்நாட்டுக்கு பெயர் சூட்டும் இந்த நாளில் போகாமல் உயிருடன் இருபபதை காட்டிலும் இறப்பதே மேல்!" என்றார் எரிச்சலாக.
அண்ணாவின் படத்தை திறந்து வைத்ததுதான் கலைவாணரின் இறுதி நிகழ்ச்சி.
அதே போல் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலைவாணரின் சிலை திறந்ததுதான் அண்ணாவின் இறுதி நிகழ்ச்சியானது.
சாமான்யனாக பிறந்து சாதனையாளனான அண்ணா இறப்பிலும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அவரது இறுதிப்பயணம் கின்னஸில் இடம்பெற்றிருக்கிறது. எந்த தலைவரின் இறுதி ஊர்வலத்திலும் இதுவரை இப்படி ஒரு கூட்டம் வந்ததில்லலையாம்.
அண்ணாவின் மீது அளப்பரிய காதல் கொண்டிருந்த எம். ஜி. ஆர்., அண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கினார்.
திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி,
”இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர் பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையே காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும் சாமான்யனாகிய நானும் குடியரசு தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார்.
அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்தது என்பது இதுவே முதல்முறை.
ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில்,
"திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவை பார்த்தாலும் அவர் ஒரு காந்தியவாதியாக இருந்தவர் எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர்.
குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு 2 பிள்ளைகள்” எனக் கூறினார்.
தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.
-எஸ்.கிருபாகரன், விகடனுக்காக எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.

No comments:

Post a Comment