Monday 18 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நகைச்சுவை.... சிலேடையாக.......
கலைவாணரைக் காணச் சென்றார் கி.வா.ஜ. அவரை வரவேற்று உபசரித்த கலைவாணரின் மனைவி மதுரம், “என்ன சாப்பிடுகிறீர்கள்... காபியா, டீயா?” என்று கி.வா.ஜ-வைக் கேட்க, கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே “டீயே மதுரம்!” என்றாராம்.
ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!” என்றார் கி.வா.ஜ
ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். “அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.
ஓகோ! கடை சிப்பந்திக்குக் கடைசிப் பந்தியா?!” என்று கேட்டார் கி.வா.ஜ.
கி.வா.ஜ வீட்டு வேலைக்கார அம்மா விசாலம் என்பவர் வீடு பெருக்கிக்கொண்டிருந்தார்களாம்.. அந்த அம்மா கொஞ்சம் குண்டு. கி.வா.ஜவின் மணைவி கொஞ்சம் நகந்துக்குங்க, விசாலம் பெருக்கனும் என்றார்களாம்.. அதுக்கு கி.வா.ஜ இன்னுமா விசாலம் பெருக்கணும் என்று கேட்டாராம்..
இம்மை - மறுமை
*கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.
வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.
“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
புடவையின் சிறப்பு...
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்
வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.
திரு. கி வா ஜ அவர்கள் இறக்கும் தருவாயில் இருந்த போது அவருடைய மகள் அவர் வாயில் பாலை ஊற்றி விட்டு பக்கத்திலிருந்த துணியால் அவர் வாயை துடைத்தார்.
உடனே கி வா ஜ அவர்கள் முகம் சுளித்தார் அவர் பெண் கேட்டாள் “ அப்பா பாலும் கசக்கிறதோ ? என்று அதற்கு கி வா ஜ அவர்கள் அளித்த பதில்: “ பாலும் கசக்கவில்லை அதை துடைத்த துணியும் கசக்கவில்லை என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் !!!
நன்றி ஸ்ரீதரன் கேஆா்

No comments:

Post a Comment