Thursday 19 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*தமிஜா, சற்று கவனி…*
Dr. B.R.J. Kannan
அழகாக சிரித்த முகமாக இருந்த அந்தச் சுட்டிப் பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தேன். சிங்கப்பூர்வாசியான அவள் பள்ளியில் ஏதோ நெஞ்சில் ஒரு சப்தம் வருவதாக் கண்டறிந்திருக்கிறார்கள். அதற்காக ஒரு இதய மருத்துவரை அணுகுமாறும் கூறியிருக்கிறார்கள். மூன்று மாதங்கள் கழித்து தான் பார்க்க முடியுமென்று அங்கு தேதி கொடுத்திருந்தார்கள். அதுவரை தாளுமா பெற்றொர் மனம்? சொந்த ஊரான மதுரைக்கு ஓடி (பறந்து) வந்துவிட்டர்கள்.
“பெயர் என்னம்மா?”
“கயல்விழி”
அருமையான பெயர். ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதுகிறாய்?”
“KAYALVIZHI”
“ஓ. பள்ளியில் உன்னை எப்படி அழைக்கிறார்கள்?
அவள் கொஞ்சம் நாணி, தன் அம்மாவைப் பார்த்து, கொஞ்சம் தலையை சாய்த்துக் கொண்டு சொன்னாள்,
“கயல்விஜி”
பெற்றொர் பக்கம் திரும்பினேன். “இதைத் தான் நீங்கள் விரும்பினீர்களா?”
“இல்லை டாக்டர், அப்படி அழைத்தால், இவள் உடனே திருத்துவாள், ஜி அல்ல ழி என்று”
“ஆக, வாழ்க்கை முழுவதும் இவள் எல்லோரையும் திருத்திக்கொண்டே இருக்க வேண்டியது தான்”
“……………..”
“ஏன் VIZHI என்று எழுதவேண்டும், VILI என்று எழுதினால் என்ன?”
“ழியை ZHI என்று எழுதுவது தானே வழக்கம்?”
“தமிழை எப்படி எழுதுகிறீர்கள், TAMIL என்றா, இல்லை TAMIZH என்றா?”
“……………..”
“அது ஒரு பக்கம் இருக்கட்டும். ‘ல’விற்கும் ‘ள’விற்கும் வித்தியாசப்படுத்தி ஆங்கிலத்தில் எழுதுகிறீர்களா?”
“இல்லை”
“பின்னர் ஏன் இதற்கு மட்டும்?”
“ஆனால், இது தானே வழக்கம், இது தானே சரி”
“இல்லை என்கிறேன் நான். நாம் பெயரை ஆங்கிலத்தில் எழுதக் காரணம், தமிழ் தெரியாதவர்கள் பெயரை அறிந்து கொள்ளத் தானே? அவர்கள் எப்படி வாசிப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் யார் ‘ழ’விற்கு ZH என்று ஆரம்பித்தார்களோ தெரியவில்லை. அதனால் பல நல்ல தமிழ்ப் பெயர்கள் நாரசாரமாக உச்சரிக்கப்படுகிறது என்பது உண்மை”
“………………”
“தமிழ் தெரிந்தவர்களுக்கு ழ என்று தெரிவிக்க ZHA என்று எழுத வேண்டிய அவசியமில்லை, அவர்களுக்குத்தான் ழ தெரியுமே. தமிழ் தெரியாதவர்களுக்கு, ழ என்று உணர்த்துவது அவ்வளவு சுலபமில்லை”
“……………….”
“நாம் என்னதான் கற்றுத்தர முயன்றாலும் தமிழ் அறியாதவர்கள், ல, ள, ழ வித்தியாசம் காண்பித்து உச்சரிக்கப் போவதில்லை. TAMIL என்று எழுதுவதால் ஏதோ டமில் என்றாவது உச்சரிக்கிறார்கள். TAMIZH என்று எழுதியிருப்போமானால், பிரதமர் முதற்கொண்டு டமிஜ் என்று தான் அழைத்திருப்பார்கள்”
“கொஞ்சம் புரிகிறது டாக்டர்”
“சண்டிகார் தெரியுமா?”
“தெரியும். பஞ்சாப் மற்றும் ஹரியானவிற்குத் தலைநகரம்”
“அவர்களும் இதே தவறைச் செய்திருக்கிறார்கள். அதனுடைய அசல் பெயர் சண்டிகட். ஹிந்தியில் வரும் ‘ட’ வரிசையில் மூன்றாவது ட. சட்டம் என்பதில் உள்ள ட அல்ல, திருடன் என்பதில் உள்ள ட. அதை உணர்த்த, ஆங்கிலத்தில் ட வரும் இடத்தில் RH என்று எழுத ஆரம்பித்தார்கள். என்ன ஆயிற்று? பெயரே மாறிவிட்டது. CHANDIGAD என்றிருக்கவேண்டியது அது.
“ஓ. இது எங்களுக்குத் தெரியாது டாக்டர்”
“நான் அங்கு மேற்படிப்பு படித்ததால் எனக்குத் தெரிய வந்தது. இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வையும் சொல்கிறேன். மெல்போர்ன் நகரத்தில் நம்மவர்கள் ஒரு இசைக் குழு அமைத்தார்கள். பெயரை ஆங்கிலத்தில் MELBOURNE ISAIK KUZHU என்றும் வைத்தார்கள். அதைத் தொடங்கி வைக்கவந்த நகர மேயர் ஆங்கிலத்தில் பேசுகையில், ‘இசைக் குஸு’ விற்கு என் வாழ்த்துக்கள் என்று தொடங்கி, அவர் பேச்சு முடியும் வரையில் பல முறை, குஸு, குஸு என்றே கூற, பலர் சிரித்தார்கள், பலர் நெளிந்தார்கள். விழா முடிந்ததும் உடனேயே, பெயரை KULU என்று மாற்றினார்கள்”
இதைக் கேட்டு மூவரும் சிரித்தார்கள்.
அப்பெண்ணிற்க்கு இதய ஸ்கேன் செய்தேன், பெரிதாக ஒன்றும் இல்லை. இனி என்னைக் காண வரவேண்டிய அவசியமில்லையென்றுக் கூறினேன்.
“அப்பாடா, இந்த சில நாட்களாக நாங்கள் பயந்துகொண்டு இருந்தோம். மிக்க நன்றி டாக்டர். சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் நான் செய்யப்போகும் முதல் காரியம், இவள் பெயரை KAYALVILI என்று மாற்றுவதுதான்”
“……………..”
“ஆனால் ஒன்று. ஒரு மருத்துவரிடமிருந்து இப்படி ஒரு அறிவுரை வரும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை”
ஹ..ஹ..ஹ… என்று எல்லோரும் சேர்ந்து சிரித்தோம்.

No comments:

Post a Comment