Saturday 20 July 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Chandrayaan- 2' உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள பெண் விஞ்ஞானிகள்...
ஜூலை 15ம் தேதி அதிகாலை விண்ணில் ஏவப்பட இருந்த இஸ்ரோவின் கனவுத் திட்டமான 'சந்திராயன் 2' துரதிஷ்டவசமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன்றைய தினம் ஏவப்படவில்லை. சந்திராயன்– 2ல் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது சரியான முடிவே, ஏனெனில் நமக்கு இலக்கு தான் முக்கியம்.
கோளாறு இருப்பது தெரிந்தும் அதனை விண்ணில் செலுத்தி வானவேடிக்கை காட்டாமல் விஞ்ஞானிகளின் உழைப்பு வீணாகாமல் காப்பாற்றப்பட்டதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்திராயன் -2 ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
’சந்திராயன்-2’ விஞ்ஞானிகளின் 10 ஆண்டு கனவு ஆகும். நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த உலக நாடுகளும் ஆராய்ச்சி செய்ததில்லை. நிலவின் இருண்ட பகுதி என்று சொல்லப்படும் பகுதியில் இந்தியா செலுத்த உள்ள சந்திராயன் 2 ஆய்வு செய்யப்போகிறது. வரலாற்றில் இடம்பெறப்போகும் சந்திராயன் 2ன் சாதனைகள் மொத்தமும் இதற்கு பின்னால் இருந்து செயல்படும் விஞ்ஞானிகளையே சேரும்.
இஸ்ரோவிற்கு சந்திராயன் 2 திட்டம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் இஸ்ரோ வரலாற்றில் முதன்முறையாக 2 பெண் விஞ்ஞானிகள் இத்திட்டத்தை வழிநடத்திச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி சந்திராயன் 2 உருவாக்கத்தில் 30 சதவிகிதம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும் மற்றொரு சிறப்பு.
பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் பணியில் பெண்கள் இடம்பெற்றிருந்துள்ளனர். ஆனால் வேற்று கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பும் செயற்கைகோள் பணியில் திட்டம் மற்றும் பணி இயக்குனர்களாக பெண் விஞ்ஞானிகள் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
முத்தையா வனிதா: இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குனர். எலக்ட்ரானிக் சிஸ்டம் பொறியாளரான இவர் டெலிமெட்ரி பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ளார். கார்டோ சாட்1, ஓசன் சாட் 1, மெகா ட்ரோபிக்ஸ் போன்ற திட்டங்களிலும் வனிதா செயல்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் வடிவமைப்பிலும் முக்கிய விஞ்ஞானியாக பணிபுரிந்துள்ளார்
இந்திய விண்வெளி அமைப்பு வனிதாவிற்கு 2006ம் ஆண்டில் சிறந்த விஞ்ஞானிக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. சந்திராயன் 2 செயற்கைகோளில் தரவுகளை தயாரித்துத் தரும் பணிகளை வனிதா மேற்கொண்டு வருகிறார்.
ரிது ஹரிடால்: சந்திராயன் 2 பணி இயக்குனராக செயல்பட்டு வரும் ரிது ஹரிடால், செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் திட்டத்தில் துணை செயல்பாட்டு இயக்குனராக பணியாற்றியவர். பெங்களூரு ஐஐஎஸ்ல் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்ற ரிது சிறு வயது முதலே விண்வெளி துறையில் ஆர்வம் கொண்டவர். 1997ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்து தன்னுடைய கனவை நினைவாக்கிக் கொண்டார்.
ரிது இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என்றும் அடையாளம் காணப்படுகிறார். ஏரோஸ்பேசில் பெண் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இஸ்ரோவிடம் இருந்து பெற்றுள்ளார் ரிது.
சந்திராயன் 2 செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு உறுதுணையாக முழு அர்ப்பணிப்புடன் தனது பங்களிப்பை செய்து வரும் வனிதாவும், ரிதுவும் இஸ்ரோவில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். நேரம் காலமின்றி மணிக்கணக்கில் எந்த சோர்வும் இன்றி இவர்கள் பணியாற்றுவார்கள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்எல்வி மார்க்– III ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் 3,877 கிலோ எடை கொண்ட பிரக்யான் என்ற ரோவர் மற்றும் விக்ரம் என்ற லேண்டர்களை சுமந்து செல்கிறது. விண்வெளி வரலாற்றில் மைல்கல் பதிக்கக் போகும் சந்திராயன் 2 வெற்றி சரித்திரத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பும் சாதனைகளாக பொன் எழுத்துக்களில் பதிவாகி உள்ளது.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி.
குறிப்பு;இதில் பங்கு கொண்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றியும்,இவர்களின் கனவுத் திட்டமான 'சந்திராயன்-2 வெற்றிகரமாக செயல் பட பிரார்த்தனையும் செய்வோமாக.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment