Wednesday 26 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

என்னை கலாய்த்த கண்ணதாசன் - இயக்குனர் விசுவின் சுவாரஸ்ய அனுபவம்.
தமிழக திரையுலக வரலாற்றில், கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞராக மதிக்கப்படுகிறார். நினைத்தவுடன் பாட்டெழுதும் அவருடைய திறமையை மெச்சாதவர்களே கிடையாது.
50-களில் தொடங்கி தான் மறையும் வரை, மிகச் சிறந்த பாடல்களை அளித்தவர் கவிஞர் கண்ணதாசன். தத்துவம், காதல், சோகம், சந்தோஷம் என பலதரப்பட்ட விஷயங்களில் எழுதியவர் கண்ணதாசன்.
ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து அம்சங்களையும் அவரது பாடலில் தொட்டிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் பாட்டெழுதக் கூடியவர் என்கிற பெருமை பெற்றவர் கண்ணதாசன்.
கண்ணதாசனுடனான தனது அனுபவத்தை நடிகரும், இயக்குநருமான விசு, ஒரு தடவை பிரமிப்புடன் கூறியுள்ளார். தனது முதல் படமான குடும்பம் ஒரு கதம்பம் படத்திற்காக பாட்டெழுத கண்ணதாசனை சென்று பார்த்தேன்.
தன்னைப் பற்றி, கண்ணதாசனிடம் இயக்குநர் பாலசந்தர் சொல்லி அனுப்பியதன் அடிப்படையில் கண்ணதாசனைச் சென்று ஒரு அறையில் சப்பனமிட்டு அமர்ந்திருக்க, அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த பஞ்ச அருணாச்சலத்திடம் கண்ணதாசன் கேலியாக பேசிக் கொண்டிருந்தார்.
நான் போய் அமர்ந்தவுடன், நீதான் குடும்பம் ஒரு கதம்பம் படத்தை இயக்குகிறாய? என்று கேட்ட கண்ணதாசன், எந்தவகையான பாடல் வேண்டும் என்று கேட்டார்.
படத்திற்குரிய டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி பாடல் ஒன்று வேண்டும். அதில் அந்த படத்தில் உள்ள கதையின் முக்கிய அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று கூறினேன்.
கதையைச் சொல்லும்படி கண்ணதாசன் கூறினார். படத்தின் கதையை விவரிக்க தொடங்கினேன். ஆனால், கண்ணதாசன் கதையை காது கொடுத்து கேட்காமல் பக்கத்தில் உள்ள பஞ்சு அருணாச்சலத்தை சீண்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
கதையை நான் சொல்லச் சொல்ல, அவர் அதைக் கேட்காமல் பக்கத்தில் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க நான் கதை சொல்வதை நிறுத்தினேன்.
நீயேம்பா... நிறுத்தி விட்டாய்... நீபாட்டுக்கு சொல்லிட்டே இரு... என்று கண்ணதாசன் கூறினார். உள்ளுக்குள் வெறுப்பாக இருந்தாலும் பெரிய கவிஞர் என்பதால் வேறு வழியில்லாமல் கதையைச் சொல்லி முடித்தேன். இவ்வளவுதான் கதையா என்று சொல்லவிட்டு, சரி எழுதிக்கோ என்று சொல்லி,
"குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை..."
என்ற பாடல் வரிகளை கடகடவென்று கூறினார். அந்த பாடலில் நான் சொன்ன திரைக்கதையின் அத்தனை விஷயங்களையும் அடக்கியதோடு அல்லாமல், நான் விட்டுவிட்ட ஒரு விஷயத்தையும் பாடலில் சேர்த்திருந்தார். இதுபற்றி நான் கேட்டபோது அவர்
விளக்கி கூறியது, எந்த அளவிற்கு நான் சொன்ன திரைக்கதையை அவர் ஊன்றிக் கவனித்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது.
அவர் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார், எங்கே கவனிக்கப் போகிறார் என்று நான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னர் உணர்ந்தேன். அவர் எழுதிய அந்த பாடல், குடும்பம் ஒரு கதம்பம் படத்துக்கே முதுகெலும்புபோல் அமைந்து, படத்தை
வெற்றிபெற வைத்தது. பாடலை விரைவாக கொடுத்த அவரின் வேகம் என்னை பிரமிக்க வைத்தது என்று இயக்குநர் விசு தெரிவித்துள்ளார்.
நன்றி இணையதளத்திலிருந்து

No comments:

Post a Comment