Tuesday 28 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு இளைஞனுக்கு தெய்வீகத் தன்மையுடன் வாழ வேண்டுமென்று மிகுந்த ஆசை வந்தது.
ஆனால் அதை எப்படி அடைவதென்று தெரியவில்லை.
பலரிமும் அதைப் பற்றிக் கேட்டுப் பார்த்தும் சரியான பதில் கிடைக்க வில்லை. கடைசியாய் ஒரு பெரியவரிடம் யோசனை கேட்டான்...
அவர் சொன்னார்...
" மகனே ! இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு உயர்வான தேடல் உனக்குள் எழுந்ததற்காக உன்னைப் பாராட்டுகின்றேன்.
அதே சமயத்தில் இதற்கான பதிலை இப்போதே நான் சொல்லிவிட்டால் உன்னால் கிரகித்துக் கொள்ள முடியாது. இது ஒவ்வொரு கட்டமாகப் பயணித்து அடையக் கூடிய நிலை .
எனவே நீ இந்த ஊரிலுள்ள தலை சிறந்த சிற்பியை சந்தித்து , அவரால் எப்படி இத்தனை தத்ரூபமான சிற்பங்களை உருவாக்க முடிகின்ற தென்று தெரிந்து வா .
அதில் உன் கேள்விக்கு விடை கிடைக்கலாம்" என்றார். இளைஞனும் ஆர்வத்துடன் கிளம்பிப் போனான்...
பலரிடம் விசாரித்த போது, அவர்களில் பலரும் ஒரு சிற்பியின் பெயரையே குறிப்பிட்டனர். இளைஞன் அந்த சிற்பியிடம் போனான்...
அவர் ஒரு புதிய சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தார். நிஜமாக அது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
அவன் அருகில் சென்ற போதும் அவர் அவனைக் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையிலேயே மும்முரமாக இருந்தார்.
சில மணி நேரங்கள் கழிந்தன. ஒரு அழகிய சிற்பம் உருவாகியிருந்தது. இப்போது சிற்பி அவனை கவனித்தார் .
" என்ன தம்பி , ரொம்ப நேரமா நிக்கிறியே ? என்னப்பா வேணும் உனக்கு ?" என்றார்.
இளைஞன் சொன்னான்...
" ஐயா ! இத்தனை தத்ரூபமா சிலை வடிக்கிறீங்களே, இதன் ரகசியம் என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கத்தான் நிக்கிறேன் "
அவனது வார்த்தையைக் கேட்ட அவர் ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டு விட்டது போல சிரித்து விட்டுக் கேட்டார் ,
" இந்த சிலையில என்ன உருவம்ப்பா தெரியுது உனக்கு ?"
அவன் , " அழகான யானைங்க ஐயா " என்றான்..
உடனே அவர் சொன்னார்...
" இதுல பெரிய ரகசியம் ஏதுமில்ல. இந்தக் கல்லுல எதெல்லாம் யானை மாதிரி தெரியலையோ அதையெல்லாம் நீக்கிட்டேன். அழகான யானை கிடைச்சிடுச்சி " என்றார் .
மிகப் பெரிய கேள்விக்கு எளிமையாய் விடை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இளைஞன் சந்தோஷமாய் அவரை அணைத்துக் கொண்டான்.
ஆம்...
வேண்டாத குணங்கள், வேண்டாத நபர்கள், இவைகளை மாத்திரம் வாழ்க்கையில் நீக்கினால் போதும்..
மிக அழகான வாழ்வு நம் கையில். இதற்க்கு சிற்பி முன் உதாரணம்.

No comments:

Post a Comment