Saturday 21 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லாம் சரிதான்..
-----------------------------
திரும்புகிற இடமெல்லாம் இளைஞர்களின் தலைகளேக் காட்சியளிக்கிறது.
சென்னை மெரினாவில் பல்லாயிரக்கணக்கில் கூடியிருப்பது ஆச்சரியம் அல்ல.
ஆனால் மதுரை தமுக்கம் மைதானத்தில்.. கோவை கொடிசியாவில்.. நெல்லை வ.உ.சியில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானக் கூட்டம் நிச்சயம் ஆச்சரியப்படத்தக்கதுதான்.
எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நேர்த்தியாக நடைபெறுகிறது. வன்முறைகள் ஏதுமின்றி இருக்கிறது.
கூடியிருக்கும் கூட்டம் தமிழகத்தை மட்டுமல்ல.. இந்தியாவையேத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
எல்லாம் சரிதான்.
ஆனால்..
அடுத்து என்ன?
தலைவர்கள் ஏதுமில்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், News 7 தொலைக்காட்சியின் ஆதரவினாலும் இக்கூட்டம் தமிழகம் எங்கு திரண்டு நிற்கிறது.
எல்லாம் சரிதான்..
ஆனால்-
அடுத்து என்ன?
ஒரு போராட்டம் என்றால் ஒரு இலக்கு இருக்க வேண்டாமா?
அரசின் கவனத்தை ஈர்ப்பதுதான் என்றால்.. நீங்கள் இப்பொழுதே ஜெயித்துவிட்டீர்கள்.
ஆனால் கூட்டம் கலையவில்லை..
அப்படியானால் அடுத்து என்ன?
தெளிவாய்த் திட்டமிடுங்கள்..
ஒரு போராட்டத்தைத் துவக்குவது மிக எளிது.
ஆனால் அதைச் சரியாய் முடிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் அது சரித்திரத்தில் இடம் பெறும்.
தமிழக முதல்வர் நேரில் வந்து பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று பலரும் முழக்கமிடுவதைப் பார்க்க முடிகிறது.
அவரை வரவழைப்பதுதான் போராட்டத்தின் நோக்கமா?
அவர் ஒருவேளை நேரில் வந்துவிட்டால்?
போராட்டம் முடிவிற்கு வந்துவிடுமா..
இல்லை.. சரியாய்த் திட்டமிடுங்கள்..
அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதற்கு கூட்டத்திலிருந்து 10 பேரைப் பிரித்தெடுத்துப் போனதிலேயே ஒரு முணுமுணுப்பு வருவதைப் பார்க்கமுடிகிறது.
அவர்கள் பேச்சுவார்த்தைக்குப் போய் வந்த பிறகு கூட்டத்தில் இருப்போரை பேச்சுவார்த்தை விபரங்களைச் சொல்லி அமைதிப்படுத்தவோ அல்லது ஆற்றுப்படுத்தவோ முடிகிறதா என்றால் அது இயலாத காரியமாகவே இருக்கிறது.
ஏனென்றால்..
அவர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தின் தலைவர்கள் அல்ல.
வந்திருக்கும் எல்லோருமே தலைவர்கள்.
எனில் யார் முடிவெடுப்பது?
யார் கட்டுப்படுவது?
எது உங்கள் அனைவரது இலக்கும்?
யாரை எதிர்த்துப் போராடுகின்றீர்கள்..
மாநில அரசை எதிர்த்தா?
மத்திய அரசை எதிர்த்தா?
பீட்டாவை எதிர்த்தா?
உச்ச நீதி மன்றத்தை எதிர்த்தா?
சரியாய் திட்டமிடுங்கள்.
சந்தடிச் சாக்கில் இந்தியாவிலிருந்து பிரிந்து போவோம்.. தனிநாடு.. தனிக்கொடி.. என்று வலைத்தளங்களில் சிலர் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.
தனிநாடு கோரி போராடி, சுடுகாட்டை மட்டுமே பரிசாகப் பெற்றிருக்கிற பல மக்களை நாம் பார்த்திருக்கிறோம்.
இது போன்ற தீவிரவாதக் கும்பலிடமிருந்தும் எல்லோரும் சற்று விலகியே இருங்கள்.
வெளிநாட்டிலிருந்து கொண்டு சிலர் எதையாவது சொல்வார்கள்..எழுதுவார்கள்.
அதை அப்படியேப் புறம் தள்ளுங்கள்..
இந்தியா நம் தேசம்..
தமிழகம் மற்றும் புதுவை அதன் ஒரு மாநிலங்கள்..
எனக்கான உரிமைகளை நான் இங்கிருந்தேதான் போராடிப் பெற்றுக் கொள்வேன். என் குரலிற்குச் செவி கொடுக்காத ஆட்சியாளர்களை நான் தயவு தாட்சண்யம் இல்லாமல் மாற்றுவேன்.
அதற்கான உரிமை எனக்கு ஜனநாயக நாட்டில்தான் கிடைக்கும்.
சர்வாதிகார தேசத்தில் நான் கொத்தடிமையாக மட்டுமே வாழ முடியும்.. அப்படிப்பட்ட ஒரு தேசம், எனக்கு எந்தவிதமானக் காரணத்திற்காகவும் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ளுகிற தெளிவாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கும் மாணவ ஆர்வலர்களை ஒருங்கிணைத்துக் கொள்ளுங்கள்.
உங்களில் சில தலைவர்களைக் கண்டு கொள்ளுங்கள்..
எதை நோக்கி நகர்கிறோம் என்பதைச் சரியாய் திட்டமிடுங்கள்.
இல்லையென்றால்..
நாளை காலையில் உங்களைப் பற்றி பேசுவதற்குக்கூட ஒருவரும் இங்கிருக்கமாட்டார்கள்..
நமக்குத் தேவை..
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்.. அதற்கான உத்தரவாதம் வேண்டும்.
ஏழைத் தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் முறையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீட் தேர்வை குறைந்த பட்சம் 6 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். தற்போது 6ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு அவர்கள் 12ம் வகுப்பு வரும் போது அவர்களிலிருந்து வேண்டுமானால் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படட்டும்.
மத்திய அரசும் உச்ச நீதி மன்றமும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இனி எந்தச் சட்டங்களையும் இயற்ற முன் வர வேண்டும்.
இதைவிட மிக முக்கியம்.. தேர்தல் காலங்களில் வாக்களிக்கப் போகாமல் இருப்பது அல்லது சரியானத் தலைவர்களுக்கு வாக்களிக்கத் தவறுவது போன்ற பிழைகளைச் செய்யாமலிருக்க வருங்காலச் சந்ததியினர் கற்றுக் கொள்வது.
ஏனென்றால் தேசத்தை ஆளுகை செய்யப் போகிற அடுத்த தலைவர்கள் உங்களிடமிருந்துதான் உருவாகப் போகிறார்கள்.
மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..
மதங்கள் கடந்து, ஜாதிகள் கடந்து, மொழி வெறிகள் கடந்து மக்களை நேசிக்கிற சரியான ஒரு தலைவருக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதுதான் அதற்கான நேரம்.
வெற்றிடத்தைக் காற்று வந்து நிரப்பட்டும்..
நன்றி தி௫ மனோகரன்

No comments:

Post a Comment