Monday 26 September 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கேள்வி - மனத்தூய்மை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தக் காண்கிறேன். அது எவ்வாறு அமையும் ?
இராம் மனோகர் - ஒழுக்கத்தால்தான் அமையும். வேறு எதனாலும் அமையாது. உடனே ஒழுக்கம் எவ்வாறு அமையும் என்று கேட்கக் கூடும். ஒழுக்கம் என்றால் மிகவும் கடினமான ஒன்று என்று நாம் அனைவருமே நினைக்கிறோம். ஆனால், ஒழுக்கம் என்றால் மிகவும் எளியதுதான். என் குரு வேதாத்திரி மகரிஷியிடம் ஒருவர் கேட்டார் ''ஐயா ஒழுக்கம் என்றால் என்ன ?'' அவர் சொன்னார் ''தனக்கோ, பிறர்க்கோ உடலாலோ, மனதாலோ தீங்கு செய்யாமல் வாழ்வதுஒழுக்கம்'' என்று. பாருங்கள் ஒழுக்கம் எவ்வளவு எளிமையானது என்று. படிப்பதற்கு எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைப்படுத்த வேண்டுமே !!
வள்ளுவப் பெருந்தகை இது குறித்து பேசும் பொழுது, ''மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.'' என்பார். இதுதான் மனத்தூய்மையின் சிறப்பு. அதாவது மனத்தூய்மையோடு செய்யும் செயல்களே சிறக்கும். அதுவே அறச் செயல்கள். மற்றவை எல்லாம் நிலைத்த சிறப்புத் தன்மை உடையவைகள் அலல. மின்னல் தோன்றி மறைவது போல மறையும் வெறும் ஆரவாரத் தன்மை உடையவைகளே. சரி, இந்த மனத் தூய்மையை ஒருவன் அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ? அதாவது ஒழுக்கமுடையவனாக வாழ என்ன செய்ய வேண்டும் ? அதற்கும் வள்ளுவர் வழி காட்டுகிறார்.
''அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.'' என்கிறார். அதாவது பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இந்த நான்கையும் தவிர்த்து வாழ்வதே ஒழுக்கம். அதுவே அறம். அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே மனத்தூய்மை வாய்க்கும் என்பதை உணர்க. இவை நான்கும் தனக்கும், பிறர்க்கும் தீமை பயக்கும் பண்புகளாகும். இவைகள் நீங்கும் பொழுது ஒழுக்கமும் அதன் பயனாய் மனத் தூய்மையும் அமையும். இதையே வள்ளலார் ''புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண்படா திரவும் பகலும்நின் தனையே கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்'' என்பார்.
எனவே ஒழுக்கமில்லாமல், மனத்தூய்மை இல்லாமல் செய்யும் தவம் சிறக்காது என்பதை உணர்த்தவே சில பதிவுகளில் மனத்தூய்மையின் அவசியம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி பாஸ்கர்

No comments:

Post a Comment