Thursday 10 August 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அமுதசுரபி ஜூலை மாத இதழின் தலையங்கம்:
....................................................................................
*`தமிழ் வாழ்க!`*
இப்போது எல்லோரும் `தமிழ் வாழ்க!` என்று முழங்குகிறார்கள். (பலர் தமில் வால்க என்று சொல்லித் தங்கள் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்!). உண்மையில் தமிழர்களில் குறிப்பிட்ட தகுதிகள் உடையவர்களுக்கு மட்டுமே தமிழை வாழ்த்த உரிமை உண்டு!
தமிழைத் திருத்தமாக உச்சரிக்கத் தெரியாதவர்களும் இலக்கணப் பிழையில்லாமல் எழுதத் தெரியாதவர்களும் தமிழை வாழ்த்தத் தகுதி உடையவர்கள் அல்லர்.
ஒரு சில சின்னப் பயிற்சிகள் மூலம் உச்சரிப்பைத் திருத்திக்கொள்ள முன்வராதவர்கள், அடிப்படை இலக்கணத்தைக் கற்றுத் தமிழைப் பிழையில்லாமல் எழுதத் தெரியாதவர்கள் தமிழ் வாழ்க எனக் கத்தி என்ன ஆகப் போகிறது?
தமிழ் என்பது அரசியல் அல்ல. அது எல்லாத் தமிழர்களின் குருதியிலும் கலந்தோடும் அறிவுசார்ந்த உணர்வு. இன, மத, ஜாதி வெறுப்பற்று `யாதும் ஊரே யாவரும் கேளிர்` என முழங்கிய மனித நேய உணர்வின் தொன்மைப் பெட்டகம்.
ஜாதி, மத வெறியோடு இயங்குபவர்கள் தமிழை எப்படி வாழ்த்த முடியும்? நம் தமிழ் அத்தகைய வெறியுணர்வுகளுக்கு எதிரானது. `யாவரும் கேளிர்` எனப் போற்றுவது. மனித சமுதாயம் முழுவதையும் நேசிப்பவர்கள் தமிழை வாழ்த்தலாம்.
சமரசம் செய்துகொள்ளாமல், சமுதாய நலனையே நோக்கமாகக் கொண்டு தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்களைப் பொருளாதார ரீதியாகப் போற்றத் தெரியாதவர்களுக்குத் தமிழை வாழ்த்த அருகதை இல்லை. பாரதியார், புதுமைப்பித்தன், அழகிரிசாமி தொடங்கி வல்லிக்கண்ணன் உள்ளிட்டு இன்றுவரை மகத்தான சாதனையாளர்கள் எல்லாம் `சேர்ந்தே இருப்பது புலவனும் வறுமையும்` என்ற கோட்பாட்டிற்குத்தான் எடுத்துக்காட்டாக விளங்க முடிகிறது என்றால், தமிழ்ச் சமுதாயத்திற்கு நல்லவற்றை ஆதரிக்கும் புத்தி வரவில்லை என்றுதானே பொருள்?
நாலாந்தரத் திரைப்படங்களைக் காசைக் கொட்டிக் குடும்பத்தோடு போய்ப் பார்த்து ரசிப்பவர்கள் நல்ல தமிழ்ப் புத்தகத்தை விலைகொடுத்து வாங்க முன்வருவதில்லை. ஒரு சிறந்த தமிழ்ப் புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்க நான்கு ஆண்டுகள் ஆகின்றன! நூலகங்கள் நல்ல தமிழ்ப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாங்கி ஆதரிக்க முன்வரவேண்டும்.
உயர்ந்த பத்திரிகைகள் விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை. சிறந்த பத்திரிகைகளைச் சந்தா செலுத்தி ஆதரிக்கத் தமிழர்கள் தயாராய் இல்லை.
திருந்திய உச்சரிப்போடு பேசுபவர்களும் இலக்கணப் பிழையில்லாமல் எழுதுபவர்களும் ஜாதி மத உணர்வில்லாமல் எல்லோரையும் நேசிப்பவர்களும் எழுத்தாளர்களைப் பொருளாதார ரீதியாக ஆதரிப்பவர்களும் தமிழ்ப் புத்தகங்களை விலைகொடுத்து வாங்குபவர்களும் நல்ல பத்திரிகையின் சந்தாதாரர்களுமே தமிழை வாழ்த்தத் தகுதி பெற்றவர்கள்.
எல்லாத் தமிழர்களும் தமிழை வாழ்த்தத் தகுதி பெறுவார்களாக.
=================================================

No comments:

Post a Comment