Tuesday 1 August 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை இடலை இட்லி !
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
''இப்பல்லாம், வீட்டுலயும் வித்தியாசமான டிபன் செய்தால்தான் சாப்பிடுறாங்க. வாரத்துல இரண்டு நாள் அரிய வகைக் கீரைகளை வைச்சு வெரைட்டியா டிபன் செய்வேன். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்ககூட, முடக்கத்தான் கீரையில் செய்யும் 'இடலை இட்லி’யை செஞ்சுதரச் சொல்லிக் கேட்பாங்க. 'இது தோசையா இல்லை இட்லியா... சூப்பரா இருக்கே’னு ஆசையாக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க. ஆரோக்கியமான டிபன். காலையில இல்லைன்னா, பசங்க ஸ்கூல் முடிச்சு வரும்போது சாயங்காலம் செய்துகொடுத்தா விரும்பிச் சாப்பிடுவாங்க. இதுக்கு வெங்காயச் சட்னி சூப்பரா இருக்கும்'' என்கிற போரூரைச் சேர்ந்த சுதா செல்வகுமார், முடக்கத்தான் கீரை இடலை இட்லி செய்முறையைச் சொன்னார்.
தேவையானவை: இட்லி அரிசி - 3 கப், முழு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப், வாழை இலை - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இடலை இட்லி தயார்.
சித்த மருத்துவர் கண்ணன்: எண்ணெய் அதிகம் சேர்க்காததால், குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடலாம். சத்தானது. வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுக்குக் குளிர்ச்சி. முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment