Tuesday 20 December 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரே குடும்பத்தில் 40 பேர்! - அசத்தும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை! வாழ்த்துக்கள்! .
மனிதர்களாலும், பெருக்கெடுத்து ஓடும் அன்பாலும் நிறைந்திருக்கிறது அந்த வீடு. பார்க்கும் எவரும், ஏதோ விசேஷ வீடு என்றுதான் நினைப்பார்கள். ஆனால், ஒரே வீட்டில் 40 பேர் ஒற்றுமையாக, கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள்... அதுவும் சென்னை மாநகரில்! ஆச்சர்யப்பட்டபடியே சென்னை, வியாசர்பாடி பி.வி.காலனியில் உள்ள வி.கே.செல்லத்தின் வீட்டுக்குச் சென்றோம்.
குதூகலமும், குழந்தைகளின் கொண்டாட்ட முமாக வீடு நிறைந்திருக்கிறது. வீட்டில் ஆல மரமான வி.கே.செல்லம் பேச ஆரம்பித்தார். ``நான் பொறந்தது, திருமணம் முடிச்சதுனு எல்லாமே பர்மாவிலதான். எனக்கு பர்மா ராணுவத்துல ஓட்டுநர் வேலை. ஆனால் 64-ல நடந்த கலவரத்துல, நானும் என் மனைவி கண்ணம்மாவும் தமிழ்நாட்டுக்கு அகதியா வந்தோம். எட்டு பிள்ளைங்களும், 15 ரூபா பணமும், 2 பவுன் தங்கமும்தான் எங்க சொத்தா இருந்தது. அப்ப முதலமைச்சரா இருந்த பக்தவச்சலம் எங்களுக்கு எல்லா வசதியையும் செஞ்சு கொடுத்ததோட அரசாங்க நூற்பாலையில வேலையும் போட்டுக் கொடுத்தார். நூற்பாலையில வேலை செஞ்ச பர்மா தமிழர்கள் எல்லாம் சேர்ந்து, முள்காடா கிடந்த இந்தப் பகுதியை குடியிருப்பா மாத்தினோம்.
நான் பர்மாவில கால்பந்து வீரன். பர்மிய அணிக்காக விளையாடியிருக்கேன். என்னோட பிள்ளைகளும் கால்பந்துல ஆர்வத்தோட இருந்தாங்க. பெரிசா படிப்பு இல்லாட்டியும், அவங்ககிட்ட இருந்த விளையாட்டுத் திறமை கை கொடுத்துச்சு. ஆறு பசங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல அரசாங்க வேலை கிடைச்சது. எல்லாருமே தேசிய அளவுல கால்பந்து விளையாடியிருக்காங்க. இந்தக் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நாங்க பர்மாவுல தான் கத்துக்கிட்டோம். அங்கே குறைந்தபட்சம் ஒரு குடும்பத்துல பத்து பேருக்கு மேல இருப்பாங்க. பர்மாவில இருந்து தமிழகத்துக்கு வந்த பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாத்தான் இப்பவும் வாழ்ந்துக்கிட்டிருக்காங்க...” - பெருமிதமாகப் பேசுகிறார் செல்லம்.
“எங்க எல்லாருக்கும் ஒரே சமையல்தான். அப்பாதான் சமைப்பார். எல்லாரும் பஃபே சிஸ்டத்துலதான் சாப்பிடுவோம். வீட்டுல விருந்தாளிங்க வந்துட்டே இருக்கிறதுனால, எப்பவும் திருவிழா மாதிரியேதான் எங்க வீடு இருக்கும்'' என்று சுவாரஸ்யமாக பேசு கிறார் செல்லத்தின் மகன் செல்வராசு. இவர்களுக்கென்று 2 கார்கள், 2 வேன்கள், 21 டூவீலர்கள் இருக்கின்றன. எல்லாப்பொருட் களும் பொதுவானவையாம். அனைத்து வாகன சாவிகளும் ஓரிடத்தில் கோத்துப் போட்டிருக்கிறார்கள்.
“எல்லாத்துக்கும் ஆணி வேர்ன்னு சொன்னா அது எங்க அப்பா (மாமனார்) தான். எப்பவும் அவர் எங்களுக்காகத்தான் சப்போர்ட் பண்ணுவார். அம்மாவும் (மாமியார்) அப்படித்தான் இருந்தாங்க. அவங்க தவறிப்போனதுக்கு பிறகு எங்களுக்கு எல்லாமுமா அப்பா ஆகிட்டாங்க. அப்பா, பிள்ளைகளைக்கூட சிலசமயம் திட்டுவாங்க. ஆனா எங்கக்கிட்ட சின்னதா முகச்சுளிப்பைக் கூட காட்ட மாட்டாங்க. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து எல்லாருக்கும் காபி போட்டு வெச்சிடுவாங்க. அதுக்கப்புறம் சமையல். எல்.கே.ஜி தொடங்கி பி.டி.எஸ். வரைக்கும் படிக்கிற 18 பிள்ளைகளுக்கும் சமைச்சு, டப்பாக்கள்ல சாப் பாட்டை கட்டுற வரைக்கும் எல்லா வேலைகளையும் அப்பாவே பார்த்துடுவார். நாங்க பிள்ளைகளை கிளப்பப் போயிடுவோம். எல்லாரும் கிளம்பின பிறகு யாராவது ஒருத்தர் வேன்ல பிள்ளைகளை ஏத்திக்கிட்டு அந்தந்த ஸ்கூல்ல அல்லது பஸ் ஸ்டாப்புல இறக்கி விட்டுட்டு வருவாங்க. வீட்ல இருந்து வேன் கிளம்பும்போது ஸ்கூல் வேன் மாதிரியே இருக்கும். இதெல்லாம் முடிச்சுட்டு நாங்க வந்தா டிபன் தயாரா இருக்கும். அதை வேலைக்குப் போறவங் களுக்கு கட்டிக் கொடுத்துட்டு நாங்களும் சாப்பிடுவோம்...” என்று வாஞ்சையாக சிரிக்கிறார் மருமகள் வசந்தி.
சம்பாதிப்பவர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கென்று கொஞ்சத்தை எடுத்து வைத்துக் கொண்டு சம்பளக் கவரை செல்லத்திடம் ஒப்படைத்து விடுகிறார்கள். யாருக்கு எது தேவையென்றாலும் செல்லத்திடம் கேட்டு வாங்கிக்கொள்வது இக்குடும்பத்தின் வழக்கம். இவர்களுக்கு என்று மூன்று வீடுகள் அருககருகே இருக்கின்றன. மூன்று வீடுகளில்தான் 40 பேரும் ஆனந்த யாழை மீட்டுகிறார்கள்.
“எனக்குக் கல்யாணமாகி 15 வருஷத்துக்கு மேல ஆச்சு. இதுநாள் வரைக்கும் எனக்கு இது வாங்கித்தாங்கன்னு கேட்குற சூழலை அப்பா உருவாக்கினதே இல்லை. வரதட்சணைங்கிற பேச்சுக்கே எங்க குடும்பத்துல இடம் கிடையாது. சில அடிப்படை நகைகள் தவிர பெரும்பாலும் எல்லா நகைகளுமே இங்க இருக்கிற பெண்களுக்கு பொதுதான். ஆண்களுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாதுங்கிறதுனால எங்க சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. எங்காவது கிளம்பினா, கைநிறைய பணம் கொடுத்து அனுப்புவார் அப்பா. தீபாவளி, பொங்கல் சமயங்கள்ல ஜவுளிக்கடைக்குப் போனா லட்சங்கள்ல பில் வரும். அதை சந்தோஷத்தோட அப்பா அனுமதிப்பார். எங்களுக்கு வர்ற மனவருத்தத்தை குடும்பத்தலைவர்கள்கிட்ட கொண்டு போகமாட்டோம். அதிகபட்ச வருத்தமே அஞ்சு நிமிஷம்தான் நிக்கும்னா பார்த்துக்கோங்க. எங்க பசங்களும் அப்படித்தான் வளர்ந்திருக்காங்க'' என்று வார்த்தைகளில் நம்மை ஆச்சர்யப் படுத்துகிறார் மருமகள் கிருஷ்ணவேணி.
இங்கு, காலை 10 மணிக்கு மதிய சாப்பாட்டுக்கான ஏற்பாடுகள் துவங்கி 12.30-க்கெல்லாம் சாப்பாடு தயாராகி விடுகிறது. 2 மணிக்கு மருமகள்களுக்கு ஓய்வு. 4.30 மணிக்கு மருமகள்கள் எழுந்து வரும்போது காபி போட்டு தயாராக வைத்திருப்பார் செல்லம்.
“அப்பா கொடுக்கிற சூடான காபியை குடிச்சுட்டு ஸ்கூல், காலேஜ் விட்டு வர்ற பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்வோம். ராத்திரி ஏழரை மணிக்கெல்லாம் டிபன் முடிஞ்சிடும். வீட்டுக்காரர் வந்தபிறகுதான் சாப்பிடணுங்கிற கதையெல்லாம் இங்க எடுபடாது. முதல்ல மருமகள்கள்தான் சாப்பிடணும். அதேமாதிரி யாருக்காவது உடம்பு சரியில்லேன்னா, யாராவது ஒருத்தர் டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வந்திடுவாங்க. யாருக்கு என்ன தேவையோ அதை குடும்பத்துல எதிர்படுற யார்கிட்ட சொல்லிட்டாலும் உடனே வந்திடும். குடும்பத்தில ஒரு முடிவு எடுக்கணுன்னா, ராத்திரி 9 மணிக்கு மேல எல்லாரும் வீட்டு முற்றத்துல கூடிடுவோம். அப்பாகிட்ட எல்லாரும் அவங்கவங்க கருத்தைச் சொல்வாங்க. இறுதியா அப்பா முடிவெடுப்பார். அவர் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. இதெல்லாம் பல ஜென்மத்து பந்தம்” என்ற செல்லத்தின் மகள் மணிமேகலை சொல்லும்போதே நமக்கும் அக்குடும்பத்தில் வாழ்ந்துவிட ஆசையாக இருக்கிறது.
“சாப்பாட்டுக்கே வழியில்லாம, கப்பலேறி வந்து, கடும் உழைப் பால எங்களுக்கெல்லாம் நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திருக்கிறார் அப்பா. இன்னைக்கு நாங்க நூறு பேருக்கு உதவுற நிலையில இருக்கோம். `எதையும் நாம கொண்டு வரலே. கொண்டு போகப்போறதும் இல்லை. நம் தேவை போக மீதமிருக்கிறதை மத்தவங்களுக்குக் கொடுக்கணும்'-னு சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்திருக்கார். நாங்க எங்க பிள்ளை களையும் அப்படித்தான் வளர்க்கிறோம். பணம், சொத்து எல்லாம் இங்கே கிடைக்கிற அன்புக்கு முன்னாடி எதுவும் இல்லை. லேசா முகம் சோர்ந்திருந்தா, என்னன்னு கேக்க எப்பவும் நம்மைச் சுத்தி பத்து உறவுகள் இருக்கிறது மிகப்பெரிய கொடுப்பினை. ஒருநாள், எங்க எல்லாரையும் முற்றத்துக்கு கூப்பிட்ட அப்பா, `எனக்குப் பிறகு இந்தக் குடும்பத்தை இதேமாதிரி ஒற்றுமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் யார் கொண்டு போகப்போறா'னு கேட்டாங்க. ஒட்டுமொத்த குடும்பத்துக்கிட்ட இருந்து கோரஸா வந்த ஒரே பேரு, எங்க தம்பி முத்தையா பேருதான். மறுநாளே அத்தனை பேரும் கிளம்பி பதிவாளர் அலுவலகத்துக்கு போய் ஒட்டு மொத்த சொத்தையும் முத்தையா பேருக்கு மாத்திட்டோம். வாழையடி வாழையா நாங்க கூட்டுக் குடும்பமா இதே மாதிரி சந்தோஷத்தோட இருப்போம்'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் செல்லத்தின் மகன் கஜேந்திரன்.
அந்த வீட்டில் இருந்து கிளம்பும்போது நம் மனதும் நிறைந்துபோயிருந்தது சந்தோஷத்தால்.
சுத்தி போடுங்க ப்ளீஸ் !
நன்றி திரு அறிவானந்தம்

No comments:

Post a Comment