Saturday 10 August 2019

''எதையும் சாதிக்கும் வெறி''

''எதையும் சாதிக்கும் வெறி''
...........................................
வாழ்க்கையில் வெற்றி என்பது தான் நம் அனைவரின் இலக்கு. ஆனால், அதனை எட்டிப் பிடிக்க பலருக்கு வழி தெரிவதில்லை. சிலர் தங்களுடைய குறைகளை நினைத்து அழுகிறார்கள்.
இன்னும் சிலர் தங்களின் குறைகளை மறைத்து புலம்புகிறார்கள். இவர்களின் முயற்சியில் எங்கோ, ஏதோ ஒரு குறை இருப்பதால் தான் சறுக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. முன்னேற்றத்தில் தடை ஏற்படுகிறது.
வறுமை சிலரை வீழ்த்தி விடுகிறது. இருந்தாலும் சிலர் தான் வறுமையை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டுகின்றனர்.
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம், சாங்க்வி கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத் என்னும் இளைஞர் வறுமைக் காரணமாக தமது சகோதரர், சகோதரி போன்று படிப்பைத் தொடர முடியாமல் கைவிட நினைத்தார்.
பின்னர் கிராமத்தில் வேலை செய்து கொண்டே கிடைத்த வருவாயில் பள்ளி இறுதித் தேர்வை எழுதி முடித்தார். ஆனாலும் தொடர் வறுமை உயர் கல்விக்குத் தடை போட்டது. வறுமையை விட பசிக் கொடுமை அவரைத் துரத்தியது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் சோதனையான கட்டமாகவே அவருக்கு இருந்தது. இருப்பினும் அவருடைய குறிக்கோளில் இருந்து அவர் இம்மி அளவும் விலகி விடவில்லை.
2006 ஆம் ஆண்டு வேலை தேடி கிராமத்தை விட்டு வெளியேற முயன்றவரை சில ஆசிரியர்கள் அறிவுறுத்தி பூனா சென்று பி.காம் படிப்பில் சேர வைத்தார்கள். 2009 -ல் பி.காம்., 2012 -ல் எம்.காம் என்று வறுமையை சமாளித்து படித்து முடித்தார்.
அதோடு நிற்கவில்லை, அடுத்த கட்டமாக சி.ஏ. படிப்பிலும் சேர்ந்தார். ஆனால், தாங்க முடியாத கட்டணம், அதிக விலை கொண்ட புத்தகங்கள் என்று சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சி.ஏ படிப்பை கைவிட நினைத்தார்.
ஆனால் சோம்நாத்தின் மன உறுதி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி அடங்கவில்லை. உடனே, பூனாவின் பெருகேட் பகுதியில் ஒரு டீ கடையை தொடங்கினார் சோம்நாத்.
அதில் கிடைத்த வருமானத்தில் மீண்டும் சி.ஏ படிப்பைத் தொடர்ந்தார். பகல் பொழுதில் டீ வியாபாரம், இரவில் படிப்பு என்று உழைத்தது வீண் போகவில்லை.
சோம்நாத் சொல்கிறார்..,
"எப்படியாவது சி.ஏ படிப்பில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியோடு படித்தேன்.
ஆனால் சார்டட் அக்கவுன்டண்டு ஆக வேண்டுமானால் நல்ல ஆங்கிலம் பேசத் தெரிய வேண்டும் என்று சொன்னார்கள்.
எனக்கோ இந்தியும் , மராத்தியும் மட்டுமே தான் தெரியும். பி.ஏ கூட மராத்தியில் தான் படித்தேன்.
முயற்சியையும், நம்பிக்கையையும் நான் கைவிட வில்லை. எனவே தான் இன்று எனது கனவு நனவாகி இருக்கிறது." என்றார் சோம்நாத்.
ஆம்.,நண்பர்களே..,
எதையும் சாதிக்கும் வெறி, ஆர்வம், விடாமுயற்சி இவை இருந்தால் போதும், எல்லாமே சாத்தியம் ஆகும்.
கடினமாய் உழையுங்கள், பணிவாய் இருங்கள்..
பிறகு என்ன, வெற்றி உங்கள் கால் அடியில்..

No comments:

Post a Comment