Thursday 8 August 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மலைகளைச் சுமந்து நடப்பவர்கள்*
ஒரு பிரபலமான உணவகத்தை
உருவாக்கிய மனிதன்
தண்டனைக் கைதியாக
மரணமடைந்த நாளில்
பல்லாயிரக்கணக்கானோர்
அந்த உணவகங்களின் தோசைகளை
ருசித்து உண்டு கொண்டிருந்தார்கள்
ஒரு பிரலமான காஃபி ஷாப்பை உருவாக்கிய மனிதன் காரை ஒரு பாலத்தின் மேல் நிறுத்தி விட்டு
ஆற்றில் தலைக்குப்புற பாய்ந்த நாளில்
பல்லாயிரக்கணக்கானோர்
அந்தக் காஃபி ஷாப்களில்
தம் காதலருடனோ நண்பருடனோ
கிசுசுத்தக் குரலில்
அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பிரபலமான பியரை உருவாக்கிய மனிதன் நாட்டை விட்டு தலைமறைவாக ஓடிக்கொண்டிருந்த போது
பல்லாயிரக்கணக்கானோர்
அந்தப் பியரை நுரை பொங்கத் திறந்து
கிறங்கும் கண்களுடன் அருந்திக் கொண்டிருந்தார்கள்.
யாரோ ஒரு பிரபல துணிக்கடை முதலாளியின் சொத்துகள்
ஜப்தி செய்யப்படும் போது
பல்லாயிரக்கணக்கானோர்
ஆனந்தமாக அங்கே பண்டிகைக்கு துணி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்
யாரோ ஒரு வைரவியபாரி
திவாலானதற்கான மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் போது
அவன் விற்ற வைரங்கள்
பல்லாயிரக்கணக்கானோர்
மூக்கில் ஒளி மங்காமல் மின்னிக் கொண்டிருக்கின்றன
யாரோ ஒரு நடிகை
மனம் கசந்து நாற்பது தூக்க மாத்திரைகளை
விழுங்கிக் கொண்டிருந்த அந்தியில்
பல்லாயிரக்கணக்கானோர்
திரையில் அவள் ஆடை சற்றே விலகுவதற்காக
பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்.
எவ்வளவு நிம்மதியானது
ஒரு தோசை சாப்பிடுபவனாக மட்டும் இருப்பது
ஒரு காஃபி அருந்துபவளாக மட்டும் இருப்பது
ஒரு பியர் குடிப்பவனாக மட்டும் இருப்பது
ஒரு வைர மூக்குத்தி அணிபவளாக மட்டும் இருப்பது
ஒரு சட்டை வாங்குபவனாக மட்டும் இருப்பது
திரையங்கில் வெறும் பார்வையளார்களாக மட்டும் இருப்பது.
சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கியவர்கள்
அழியும் போது
சாம்ராஜ்ஜியங்கள் அழிவதில்லை
அப்போது அது உருவாக்கியவர்களிடமிருந்து
ஒரு தனித்த உயிரியாகப் பிரிகிறது
தன்னை உருவாக்கியவர்களை
அது தாட்சண்யமற்றுக் கை விடுகிறது
நீங்கள் மலையடிவாரங்களில்
உங்கள் ஆடுகளை மேய்க்கும் போது
நிம்மதியாகச் சற்றே கண்ணயர்கிறீர்கள்
மலைகளைச்
சுமந்து நடப்பவர்களை
மலைகள் மெல்ல
பூமிக்குள் அழுத்துகின்றன
மனதைப் பிழியும் கணங்கள்.

No comments:

Post a Comment