Thursday 16 June 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி- அவசியம் படியுங்கள் பாராட்டுங்கள் .
தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வந்துள்ளவர்களின் குழந்தைகளுக்கு தமிழையும் தமிழ் பண்பாடு கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுக்கவும் , குழந்தைகளுக்கு தமிழகம் சார்ந்த கலைகளை சொல்லிக்கொடுப்பதற்கும் கலிபோர்னியா தமிழ் கல்விக்கழகம் 1999ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் வளைகுடாப் பகுதியில் முதன் முதலாக துவங்கப்பட்டது. முன்னாள் தமிழக அமைச்சர் செ.மாதவனின் மகள் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கத்தின் முயற்சியால் இந்த அமைப்பு துவங்கப்பட்டது.
1999ம் ஆண்டில் 13 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது. இன்று அமெரிக்காவில்உள்ள 13 மாநிலங்களில் 40 பள்ளிகளையும், ஐக்ய அரபு நாடுகளில் 2 பள்ளிகளையும், யுகேயில் 2 பள்ளிகளையும் நடத்தி வருகின்றது, இப்பள்ளிகளில் 5500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்ன்றனர் 1000 பேர் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருகின்றனர் . இவற்றில் சில பள்ளிகளை கழகம் நேரடி நிர்வாகத்தில் நடத்தி வருகின்றது. பல பள்ளிகளை இணைப்பு பள்ளிகளாக நடத்திவருகின்றது. இணைப்பு பள்ளிகளுக்கு கற்றலுக்குத் தேவையான புத்தகம் மற்றும் பயிற்சிக்கான பொருட்களை வழங்கி வழிகாட்டி வருகின்றது.
ஏதேனும் ஒரு பள்ளியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை தோறும் முற்பகலில் வகுப்புக்களை நடத்தி வருகின்றனர் . மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் பயிற்சிப் புத்தகங்கள், துணைப்பாட நூல்கள் , நோட்டுக்கள் வழங்கப்படுகிறது.தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.விழாக்கள் பல போட்டிகள்,ஆண்டுவிழா நடத்தப்படுகிறது
.நூற்றுக்கணக்கான இல்லத்தரசிகள்,மற்றும் பல நிறுவனங்களில் பணிபுரிவோர் இலவசமாக ஆசிரியப் பணி ஆற்றிவருகின்றனர் . கல்வி. நூலகம்.நிர்வாகம் பயிற்சி, எனப் பல குழுக்கள் மற்றும் பிரிவுகளின் பொறுப்பாளர்கள் பள்ளியைத் திட்டமிட்டு நடத்துகின்றனர்.மேலும் முதல்வர் துணை முதல்வர்களும் உள்ளனர். இவர்கள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றனர்
முழு நேரக் கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இங்கு செயல் படுத்தப் படுகிறது. அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் செயல்பட்டு வருவதால் கலிபோர்னியா தமிழ் கல்விக் கழகம் எனும் பெயர் உலகத் தமிழ் கல்விக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறது.
தமிழ் கல்விக்கழகத்தின் முக்கிய நோக்கமானது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகள் தமிழ் திறன் பெற்று தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுப்பதாகும்.
தமிழ் பேசத் தெரிந்த குழந்தைகளும் மேலும் நன்கு தமிழ் கற்றுத் தமிழில் புலமைப் பெற்றுத் திகழ்வதும் தமிழ் கல்விக்கழகத்தின் நோக்கமாகும். இதற்காக பிரத்யேகமாக நாங்கள் உருவாக்கியுள்ள பாடத்திட்டங்கள் மழலைக் கல்வி முதல் ஏழாம் நிலை வரை எளிய எட்டு நிலைகளாக இங்குத் தரப்பட்டுள்ளது.
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
இந்தப் பாடத்திட்டங்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்பட்டுக் கற்றுத் தரப்படுகின்றது.மேலும் இப்பாடத்திட்டங்கள் முழுவதும் தமிழ் கல்விக்கழகத்தின் வாயிலாக ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் நேரடி இணையதள வாயிலாகவும் தமிழ் கற்ப்பிக்கப்படுகின்றது.
வகுப்பில் பங்கேற்ற பின் அச்சிட்டு படிக்கும் பாடங்கள் மற்றும் பணித்தாள்களும், தமிழ் திறனை சோதிக்க வினாக்களும், பெற்றோர் உதவியுடன் வகுப்பில் கற்றப் பாடங்களை மறுபார்வையிட கற்பித்தல் தளவாடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதிகளும் தமிழ் கல்விக்கழகத்தில் தரப்பட்டுள்ளது. தங்களின் தமிழ் திறனை சோதிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் பகுதியில் தமிழ் திறனை சோதித்தறிந்து தகுதிக்கேற்ற சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.









No comments:

Post a Comment