Friday 14 July 2017

முகநூல் தவல் (மனிதத்தேனீ)

பாராட்டுக்கள்..........
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபா திவாகர் ஐ.பி.எஸ். சிறைத்துறை டி.ஜி.பி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. ‘என்னுடைய பணியின் ஓர் அங்கம் இது. சிறையில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கின்றன’ என அதிர வைக்கிறார் ரூபா.
கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜியாக பதினைந்து நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார் ரூபா திவாகரன் ஐ.பி.எஸ். பணிக்குச் சேர்ந்த நாள் முதலாகவே, சிறைத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை நடத்தினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்குப் பதிலளித்த ரூபா, ‘ சிறைக்குள் சசிகலாவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தனி சமையலறையே செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக, இரண்டு கோடி ரூபாய் வரையில் லஞ்சம் பெற்றுள்ளனர்’ என விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் பத்திரிகைகளில் வெளியாகி, டி.ஜி.பிக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுத்தது. துறையின் உயர் அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு இன்று அவர் விளக்கம் அளித்தபோது‘ இந்த ஊழலில் டி.ஜி.பிக்கும் பங்கு உண்டு’ எனப் பகிரங்கமாகவே சுட்டிக் காட்டினார்.
“இதுதான் அவருடைய சுபாவம். அரசுப் பணியில் நேர்மையாகச் செயல்படுவது என்பது அதிகாரிகளின் கடமைகளில் ஒன்று. அதை மிகச் சரியாகக் கடைபிடித்து வருகிறார். அவருடைய குடும்பத்தில் பெற்றோர் இருவரும் அரசு அதிகாரிகள். அவருடைய தங்கை ரோகிணி, ஐ.ஆர்.எஸ் அதிகாரி” என விவரித்த பெங்களூரு அரசு அதிகாரி ஒருவர், “வெறுமனே பேட்டிகளின் மூலம் மட்டுமே, அதிர வைக்கும் அதிகாரியாக அவர் இருந்ததில்லை. ஐ.பி.எஸ் பணியில் நேர்மையாக செயல்பட்டவதற்குப் பல பரிசுகளை வாங்கியிருக்கிறார். அதேபோல், பலவித சோதனைகளையும் கடந்தே வந்திருக்கிறார். அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் கர்நாடகா மாநிலம், தாவனகரே பகுதிதான். படிக்கும் காலத்திலும் சிறந்த மாணவியாக வலம் வந்தார். அவருடைய 15-வது வயதில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் கையால், ‘சிறந்த என்.சி.சி மாணவி’ என்ற விருதையும் பெற்றார். பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி படிப்புகளில் கர்நாடக மாநில ரேங்க் பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.
கல்லூரியிலும் முதுநிலை உளவியல் படிப்பைத் தங்கப்பதக்கத்துடன் நிறைவு செய்த பெருமை ரூபாவுக்கு உண்டு. அவருடைய முக்கியமான பொழுதுபோக்கே அழகிப் போட்டிகளில் பங்கு பெறுவதுதான். ‘மிஸ் தாவனகரே’ பட்டத்தையும் வென்றுள்ளார். துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் அவர் குவித்துள்ள பதக்கங்களுக்கு அளவே இல்லை. பரதநாட்டியம், ஹிந்துஸ்தானி இசை என அனைத்தும் அவருக்கு அத்துப்படி. 2000-ம் ஆண்டு நடந்த அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர், காக்கிச் சட்டையின் மீதிருந்த காதலால் ஐ.பி.எஸ் பணியைத் தேர்வு செய்தார். பயிற்சிக்காலத்திலேயே ஐந்தாம் இடத்தைப் பிடித்து, ‘சிறந்த அதிகாரி’ எனப் பெயர் வாங்கியவர். 2003-ம் ஆண்டு முனிஷ் மோட்கில் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முனிஷ் மோட்கில் ஐஏஎஸ், தற்போது கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தின் மின்சார நிறுவன இயக்குநராக உள்ளார். இந்த ஆட்சிப் பணி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்” என்றார் விரிவாக.
“ரூபா பணிபுரியும் இடங்களில் எல்லாம் பெண்களின் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார். ‘எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும், கர்நாடகாவைவிட்டு நகர மாட்டேன்’ என அடிக்கடி சொல்வார். ஒருமுறை பணி நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு அவர் கணவர் இடம் பெயர்ந்தபோதும், கர்நாடகாவைவிட்டு அவர் நகரவில்லை. அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் அதிரடி இல்லாமல் இருந்ததில்லை. 2007-ம் ஆண்டு பா.ஜ.கவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான உமா பாரதி, ஹூப்ளி மாநகரத்தில் கால் வைத்தவுடன் கைது செய்தார். இந்த நடவடிக்கையை சக அதிகாரிகளே எதிர்பார்க்கவில்லை. அரசியல்ரீதியாக எந்த நெருக்கடி என்றாலும், அதை எதிர்கொள்வதில் ரூபாவுக்கு நிகர் அவர்தான்” என உற்சாகமாகப் பேசிய ரூபாவின் நண்பர் ஒருவர்,
“பெங்களூரு காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றபோது, ‘மக்களுக்குச் சேவை செய்யத்தான் காவல்துறை’ என உறுதியான நிலைப்பாடு எடுத்து, அரசியல்வாதிகளுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் அளித்து வந்த அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பைத் தளர்த்தினார். இதனைத் தொடர்ந்து, ‘பதவியில் இல்லாத முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு அதிகப்படியான சேவைகள் வழங்கப்படுகின்றன’ எனக்கூறி பாதுகாப்பு வாகனங்களையும் போலீஸ் அதிகாரிகளையும் குறைத்து அதிரடி காட்டினார். பொறுப்பான காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல், பெண் உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பதை அடிப்படை கடமையாக வைத்திருக்கிறார் ரூபா திவாகர்” என்றார் நெகிழ்ச்சியோடு.

No comments:

Post a Comment